Published : 01 Apr 2024 06:58 PM
Last Updated : 01 Apr 2024 06:58 PM
மதுரை: “பிரதமர் மோடி தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் பார்ப்பதோடு, தமிழகத்துக்கு எதுவுமே செய்யக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்” என நடிகை ரோகிணி மதுரையில் இன்று பிரச்சாரம் செய்தார்.
திமுக கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான ரோகிணி மதுரையில் இன்று ஜெய்ஹிந்த்புரம், திடீர் நகர், சொக்கலிங்க நகர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: ''எளிய மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிராலிக்க கம்யூனிஸ்ட்டுகளின் பலம் அதிகரிக்க வேண்டும். அதன்படி சு.வெங்கடேசன் எளிய மக்களின் வேட்பாளர். அவரை மதுரை வாக்காளர்கள் மீண்டும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
பிரதமர் மோடிக்கு பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருப்பதை சொல்லியுள்ளார். ஆனால், மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாடு அச்சுறுத்தலை சந்திக்கும் நிலையில் தற்போதைய தேர்தல் மிக முக்கியமானது. நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்த இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
தமிழகம் மழை, வெள்ளத்தால் பாதித்தபோது வராதவர், அதற்காக ஒரு பைசா நிதி கூட வழங்காத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் காலம் என்பதால் தமிழகத்துக்கு வாக்கு கேட்டு மட்டுமே வருகிறார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்கள் தெளிவாக இருப்பதால் அதற்கு பாடம் புகட்டுவர்.
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகுகிறார். தமிழகத்துக்கு எதுவுமே செய்யக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறார். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல ஆயிரம் கோடி நிதி திரட்டி ஊழல் செய்துள்ளனர். தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்'' என்று அவர் பேசினார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், துணைமேயர் டி.நாகராஜன், தமுஎக நிர்வாகிகள் ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, வெண்புறா, சாந்தாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT