Published : 01 Apr 2024 02:54 PM
Last Updated : 01 Apr 2024 02:54 PM

“2019 தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன்” - கிருஷ்ணசாமி ஆதங்கம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: “2019 மக்களவைத் தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன். அதிமுக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் கூட்டணிக்கு வந்துள்ளேன்” என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் அதிமுக கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, “தென்காசி தொகுதியில் கடந்த காலங்களில் போட்டியிட்டு தோற்று இருந்தாலும், இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன் என்ற வைராக்கியத்துடன் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

அவரை அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற செய்ய வேண்டும். கிருஷ்ணசாமி சமுதாய போராளியாக அரசியலுக்கு வந்தவர். தற்போது சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு, பக்குவப்பட்ட அரசியல்வாதியாக உள்ளார். ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எந்த பிரச்சினை என்றாலும் என்னை அழையுங்கள், நான் செய்து தருகிறேன்” என்றார்.

அதைத் தொடர்ந்து வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசுகையில், “காசிக்கு அடுத்ததாக பிரசித்தி பெற்ற புண்ணிய பூமி தென்காசி. ஆனால் இந்தத் தொகுதியில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. தென்காசி தொகுதியில் வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உடைய பகுதியாக மாற்ற வேண்டும் என்பது எனது பிறவி லட்சியம். இந்தக் கூட்டணி அமைப்பதற்கு முன் 5, 6 முறை பத்திரிகை வெளிச்சம் இல்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியபோது, 2019 தேர்தலில் தமிழகத்தில் யார் வெற்றி பெற்றிருக்க வேண்டுமா இல்லையோ நான் வென்றிருக்க வேண்டும். கால நிலவரம் அப்படித்தான் இருந்தது. ஆனால் சில இடர்பாடுகள், சுணக்கங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று கூறினேன்.

கொங்கு மண்டலத்தில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுங்கள், எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என வேலுமணி உள்ளிட்ட அனைவரும் கூறினர். பதவிதான் முக்கியம் என்றால் நீலகிரியில் நின்றிருப்பேன். ஆனால், நான் ஜெயித்தால் தென்காசியில் தான் ஜெயிப்பேன் என்பதில் உறுதியுடன் இருந்தேன். அவர் உடனடியாக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமுரளி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோரை அழைத்து கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீங்கள் வரிந்து கட்டி கொண்டு களத்தில் நின்றால் உங்களை எதிர்க்க யாரும் கிடையாது. யானையின் பலம் யானைக்கு தெரியாது என்பது போல உங்களின் பலம் உங்களுக்கு தெரியாமல் உள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் நான் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு அதிமுக தொண்டர்களின் உழைப்பு முக்கிய காரணம்.

கடந்த 28 ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் தென்காசி தொகுதி மக்களுக்காக உழைத்துள்ளேன். அதிமுக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் கூட்டணிக்கு வந்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கூட்டணிக்கு நியாயமாக நடப்பது அதிமுக மட்டும் தான். கூட்டணி தர்மத்தை பின்பற்றி அதிமுகவினர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தால் தென்காசியில் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்எல்ஏ மான்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x