Published : 01 Apr 2024 11:11 AM
Last Updated : 01 Apr 2024 11:11 AM

“திசைதிருப்பல்கள் வேண்டாம்; பதில் சொல்லுங்கள் மோடி” - முதல்வர் ஸ்டாலினின் 3 கேள்விகள்

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக - காங்கிரஸ் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். திசைதிருப்பல்கள் வேண்டாம்; பதில் சொல்லுங்கள் மோடி என அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) காலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது. காங்கிரஸும், திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன்கள், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை. வேறு யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மை தான் ஏழை மீனவர்கள், குறிப்பாக மீனவப் பெண்களின் நலன்களைப் பெரிதும் பாதித்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று காலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தனது கண்டனத்தைப் பகிர்ந்தார். வெளியுறவுத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டு ஏற்பதற்கில்லை என்றார். கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்ததாகச் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழக முதல்வருக்கு 21 கடிதங்கள் கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக எழுதியதாகக் கூறும் அமைச்சர் ஜெய்சங்கர் அதில் ஏன் ஒருமுறை கூட கச்சத்தீவு மீட்பு பற்றி குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக தேர்தல் களத்தில் அதிமுக - திமுக இடையேயான விமர்சனங்கள் மட்டுமே எழுந்துவந்த நிலையில் கச்சத்தீவு பிரச்சினை புதிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். ஆனால் கச்சத்தீவு பற்றி அதில் ஏதும் நேரடியாகக் குறிப்பிடாமல் மீனவர் பிரச்சினை எனச் சுட்டிக் காட்டி அதில் பிரதமர் உள்ளிட்டோர் எழுப்பும் சர்ச்சைகள் எல்லாம் திசைதிருப்பல்கள் என வசை பாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x