Last Updated : 01 Apr, 2024 07:13 AM

3  

Published : 01 Apr 2024 07:13 AM
Last Updated : 01 Apr 2024 07:13 AM

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ; விரிவான திட்ட அறிக்கை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு சமர்ப்பிக்கவில்லை

சென்னை: விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் நிதி பகிர்வுக்கு தமிழக அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, பரங்கிமலை - சென்னை சென்ட்ரல், விமானநிலையம் - விம்கோநகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பிட்டில், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்தவழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டன.

இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவ. 26-ம் தேதி அனுப்பப்பட்டது. அதன்பிறகு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை 2022-ம் ஆண்டு செப். 22-ம் தேதி அனுப்பப்பட்டது. இதன் மதிப்பீட்டின்படி திட்ட செலவு மட்டும் ரூ. 4,625 கோடியாக உயர்ந்தது.

ஒட்டுமொத்தமான திட்ட அறிக்கை சமர்ப்பித்து 25 மாதங்களை கடந்தும் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையில், 2024-25-ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் வழங்கி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு நிதி பங்களிப்புக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம்இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. மேலும், இதன் விரிவான திட்டஅறிக்கை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் நிதி பகிர்வுக்கு தமிழக அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. இது தாம்பரம் பகுதியைச் சுற்றியுள்ள மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறியதாவது: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்துநிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புதிட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் நிதி பகிர்வு ஒப்புதலுக்கு தமிழக அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்.டி.ஐ) தெரியவந்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை மெட்ரோரயில் நீட்டிப்பு திட்டம் மத்திய அரசின்நிதி பகிர்வுக்கு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அனுப்பப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், அனுப்பவில்லை.

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு தினசரி 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் அவசியமாகிறது. இதில் தமிழக அரசு தாமதம் செய்யக்கூடாது.

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இதற்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இது தொடர்பாக தமிழகஅரசு பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x