Published : 05 Apr 2014 09:57 AM
Last Updated : 05 Apr 2014 09:57 AM

சொன்னத செய்யல.. பெண்டு எடுத்துருவேன்...!- தே.மு.தி.க. வேட்பாளரை கலாய்த்த விஜயகாந்த்

‘‘பாலைவனமான திண்டுக்கல்லை, பால் வளமாக்குவேன்னு எங்க வேட்பாளரு சொல்லியிருக்காரு, சொன்னதச் செய்யல... பெண்டு எடுத்துருவேன்..!” என தனது கட்சி வேட்பாளரை விஜயகாந்த் கலாய்த்தார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியது:

தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணியின் வாகனத்தை ஆளும்கட்சியினர் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். தோல்வி பயத்தில் அவர்கள் தாக்கத் தொடங்கி விட்டனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு இருவழிச் சாலை போடுறதா சொன்ன அதிமுக குடிக்க தண்ணீர்கூட கொடுக்கவில்லை. ஒரு குடம் 10 ரூபாய்க்கு விற்கிறது. அதிமுக.வும் திமுக.வும் மாறி மாறி மக்களை ஏமாற்றினர். அவர்களை விரட்டத்தான் பாமக, பாஜக, மதிமுக.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

தேனிக்காரர் ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானார். அவரால் கொடைக்கானலுக்கு தண்ணீர் கொண்டுவர முடிந்ததா? மலைவாழ் மக்களுக்கு பட்டா கொடுக்க முடிந்ததா?. ஆனா, தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் கொடைக்கானலில் பினாமி பெயரில் பட்டாவுடன் சொத்துகள் உள்ளன. மலைகளின் இளவரசி கொடைக்கானல், ஏழைகளின் அரசி ஊட்டி எப்படியிருந்து இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஊழலில் ஊறிப்போனதால், இந்த சுற்றுலா நகரங்களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை.

ராத்திரி ஓட்டு கேட்டா தப்பில்லை என்கிறது தேர்தல் ஆணையம். ராத்திரி ஓட்டா கேட்பாங்க, பணம்தான் கொடுப்பார்கள். பழைய சட்டம் போதும். எதற்காக புதுப்புது சட்டங்கள் கொண்டு வருகிறீர்கள்.

திமுக.வுக்கு ஏற்பட்டதுதான் அதிமுக.வுக்கும், கடந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எங்கள் பெயரை சொல்லவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தமுறை அதிமுக எங்கள் பெயரை சொல்லவில்லை. இவங்களுக்கும் திமுக.வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படப் போகிறது.

எங்க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாலைவனமான திண்டுக்கல்லை பால் வளமாக்குவேன்னு சொல்லி இருக்கிறார். சொன்னதை கண்டிப்பா செய்வார். செய்யா விட்டால் பெண்டு எடுத்துருவேன் (சிரித்தபடி, கலாய்த்தார்).

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவங்கள தூக்கி வெளியே போடுங்க

விஜயகாந்த் பேச ஆரம்பிக்கும்போது, மற்ற ஊர்களைப் போல தொண்டர்களைப் பார்த்து கொடியை கீழே இறக்குங்க, மத்தவங்க என் முகத்தைப் பார்க்க வந்துள்ளனர். அவங்களுக்கும் நான் தெரியணும் என்றார். தொடர்ந்து பேசத் தொடங்கியதும் மேடை முன் அமர்ந்திருந்த தொண்டர்கள் இருவர் விசிலடித்து கூச்சலிட்டனர். அவர்களைப் பார்த்து சத்தம் போடாதீர்கள் என பொறுமையாக விஜயகாந்த் சொல்லிப் பார்த்தார். அவர்கள் தொடர்ந்து விசிலடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் மீண்டும் கோபப்படாமல் விஜயகாந்த், “அவங்க பேசல, டாஸ்மாக் பேச வைக்கிறது” என்றார். ஒரு கட்டத்தில் டென்ஷனான விஜயகாந்த், அவங்கள தூக்கி வெளியே போடுங்க... என்றதும் அவருடைய தொண்டர் படையினர் கூச்சலிட்ட இருவரையும் வெளியேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x