Published : 31 Mar 2024 06:03 PM
Last Updated : 31 Mar 2024 06:03 PM
ராமநாதபுரம்: “ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் வந்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த சதி திட்டத்தை வகுத்து கொடுத்தது யார் ?. தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலரை நிறுத்தினர். ஆனால், ஓட்டக்கார பன்னீர்செல்வம் என்பது நான்தான். சதிகாரர்களால், இன்னொரு ஓட்டக்காரத் தேவர் பன்னீர்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக சார்பில் நான் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒரு சுயேச்சை வேட்பாளராக, நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டிருக்கிற பன்னீர்செல்வத்துக்கு இவ்வளவு ஆதரவு அளிப்பதற்காக, உங்கள் அனைவரது பாதம்தொட்டு வணங்குகிறேன்.
ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் வந்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த சதி திட்டத்தை யார் வகுத்து கொடுத்தது. தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலரை நிறுத்தினர். ஆனால், ஓட்டக்கார பன்னீர்செல்வம் என்பது நான்தான். சதிகாரர்களால், இன்னொரு ஓட்டக்காரத் தேவர் பன்னீர்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த 6 பேருக்கான சின்னங்களாக வாளி,பலாப்பழம், திராட்சைக் கொத்து உள்ளிட்டவை இருந்தன. தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தைக் கேட்டால் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி முதலில் ஒருவருக்கு வாளி கிடைத்தது. குலுக்கலில் பலாப்பழம் எனக்கு விழுந்துவிட்டது.
பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். இருப்பதிலேயே பெரிய பழம் பலாப்பழம்தான். அது முக்கனிகளில் ஒன்று. மக்களுக்கு புரதச் சத்துக்களைத் தருகின்ற சுவையான பழங்கள் இந்த முக்கனிகள். நேற்று நான் பிரச்சாரத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலாப்பழம் சின்னம் குலுக்கலில் எனக்கு கிடைத்த தகவல் வந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களில் ஊர் முழுக்க எனது சின்னம் பரவிவிட்டது. வாட்ஸ் அப் மூலம் வேகமாக பரவிவிட்டது. பிரதமர் மோடி நிலையான இந்திய பிரதமராக வரவேண்டும் என்று இந்தியாவில் மக்கள் அலை வீசிக்கொண்டிருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாபெரும் வெற்றி பெறும் என்ற சூழல் நிலவுகிறது. அந்தக் கடலில் என்னையும் எனது வெற்றியையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ராமநாதபுரம் மக்களாகிய உங்களைச் சார்ந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் பிரச்சினை மட்டுமின்றி, அதிமுக ஆட்சியின்போது தமிழக அரசு சார்பில் நாங்கள் கேட்ட அனைத்தையும் பிரதமர் மோடி செய்து கொடுத்தார். பிரதமர் மோடி தேசிய அளவில் ஒரு கூட்டணி அமைத்தார். அப்போது தனது வலதுபுறத்தில் எடப்பாடி பழனிசாமியை அமரவைத்தார். பிரதமர் வாழ்த்துக்கூறி அனுப்பிவைத்த ஒரே வாரத்தில், பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியேறுவதாக அறிவித்தார்.
காரணம் எதுவும் இல்லாமல், ஆதரவை வாபஸ் வாங்கினார்? இது எவ்வளவு பெரிய துரோகம். தன்னுடை ஆட்சிக் காலத்தில் பெற வேண்டியதை எல்லாம் நான்கரை ஆண்டுகளாக பெற்றுவிட்டு, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல், துரோகம் செய்துவிட்டார். எடப்பாடி, யாரால் நான்கரை ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் ஆட்சி செய்தார் என்பது எனக்கு தெரியும். கொஞ்சம்கூட நன்றி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT