Last Updated : 31 Mar, 2024 06:35 PM

 

Published : 31 Mar 2024 06:35 PM
Last Updated : 31 Mar 2024 06:35 PM

சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் - கோவையில் அரசியல் கட்சிகள் தீவிரம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவையில் சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சார்பில் 11 பேர், சுயேச்சைகள் 26 பேர் என மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சார முறைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப, தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. முன்பு எல்லாம் தேர்தல் என்றால் ஒரு திருவிழா போல களை கட்டும். வீதிக்கு வீதி அரசியல் கட்சிகளின் கொடிகளும், பதாகைகளும், சின்னங்களும் பளிச்சிடும்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பர். அதேபோல், வீடுவீடாகச் சென்றும், திண்ணைப் பிரச்சாரம் செய்தும், பேரணியாகச் சென்றும், வாகனங்களில் சென்றும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வர். தற்போது திண்ணைப் பிரச்சாரங்களைவிட, வாகனப் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தொகுதியில் ஓரிடத்திலோ, சில தொகுதிகளை மையப்படுத்தி அதில் ஓரிடத்திலோ பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வந்து பேசி பிரச்சாரம் செய்கின்றனர். அதேபோல், நடப்புதேர்தலில், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வேட்பாளர்களின் பிரச்சாரத்துக்கு கை கொடுக்கின்றன. கோவையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் சார்பில் அவர்களது கட்சியினர் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பிரதான அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தற்போதைய சூழலில் ஸ்மார்ட் செல்போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம். அதில் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களினை பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ளனர். எனவே, எங்களின் தேர்தல் பிரச்சார யுக்திக்கு முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்.

பிரதானமாக உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் சமூகவலைதளங்களை பராமரிப்பதற்கு ‘ஐடி விங்’ தனியாக உள்ளது. படித்த இளைஞர்கள் இதில்பொறுப்பாளர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் நாங்கள் சமூகவலைதள பிரச்சாரங்களை மேற்கொள்கிறோம். கட்சியின் பெயரில், வேட்பாளரின் பெயரில், தனி நபர் பெயரில் என பல பக்கங்களை உருவாக்கி, எங்கள் கட்சியின் கொள்கை, சாதனைகள், வேட்பாளரின் விவரம், நாங்கள்வெற்றி பெற்றால் செய்யப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிக்கிறோம்.

மேலும், எதிர்க்கட்சிகளின் குறைபாடுகள், அவர்கள் செய்த நிர்வாகச்சீர்கேடுகள், எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், அவர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். புகைப்படங்களாகவும், சில விநாடிகள் ஓடக்கூடிய ரீல்ஸ் வீடியோவாகவும் நாங்கள் எங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறோம். நேரடி பிரச்சாரத்துக்கு நேரக் கட்டுப்பாடு, நாள் கட்டுப்பாடு உண்டு. ஆனால், இதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்பது கூடுதல் பலமாகும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x