Published : 31 Mar 2024 09:53 AM
Last Updated : 31 Mar 2024 09:53 AM

“இலவசம் என்பது வளர்ச்சி திட்டமல்ல; வீழ்ச்சி திட்டம்” - சீமான்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூஸ்ஜேனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பிரச்சாரம் மேற்கொண்டார். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூஸ்ஜேனை ஆதரித்து தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: அணு உலைக்கு எதிராக இங்குள்ள கட்சிகள் எதுவும் குரல் கொடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் எடுத்து கொடுத்தவர்கள், அதனை திறந்து வைத்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து உள்ளீர்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க சென்றவர்களை, எந்த மரபையும் கடைபிடிக்காமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? துப்பாக்கி சூடு நடத்திய போலீஸாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக குரல் கொடுக்க வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விளாத்தி குளத்தில் நடந்த பிரச்சாரத்தில் சீமான் பேசும்போது, “நமது வீட்டு தாய், சகோதரிக்கு ரூ.1,000 கொடுக்குமாறு இவர்களிடம் சொன்னது யார்?. ரூ.1,000 என்றால் ஒரு நாளைக்கு ரூ.30 ஆகும். ரூ.30 கூட சம்பாதிக்க முடியாமல் எனது தாயை நிறுத்தியது யார்? என்று யாரும் கேட்கவில்லை.

ஒரு தாய் மாதத்துக்கு ரூ.3 ஆயிரத்துக்கு குடிநீர் வாங்குகிறார். அவருக்கு ரூ.1,000 கொடுத்து என்ன செய்வார்? ஆயிரம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். குடிக்க சுத்தமான குடிநீரை இலவசமாக கொடுங்கள். இலவசம் என்பது வளர்ச்சி திட்டமல்ல. வீழ்ச்சி திட்டம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் கனவு” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x