Last Updated : 01 Feb, 2018 03:29 PM

 

Published : 01 Feb 2018 03:29 PM
Last Updated : 01 Feb 2018 03:29 PM

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்: நாராயணசாமி கருத்து

விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறியுள்ளனர். கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வாங்க ரூ.10 லட்சம் கோடி கொடுத்திருந்தோம். தற்போது அந்த தொகையுடன் ரூ.1 லட்சம் கோடி சேர்க்கப்பட்டு ரூ.11 லட்சம் கோடியாக அறிவித்துள்ளார். வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதம் இருக்கம் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்த பட்ஜெட்டைப் பொருத்தவரை மருத்துவம், கல்வி, சாலை போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு பலன் தரம் வகையிலும், விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்காக எந்தவித திட்டமும் இல்லை. அதுமட்டுமின்றி ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் இல்லை.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் இல்லை. நாட்டு பாதுகாப்புக்காக தேவைப்படும் உபகரணங்கள், தளவாடங்கள் வாங்குவது சம்மந்தமான திட்டம் எதுவும் இல்லை. இந்த பட்ஜெட்டைப் பொருத்தவரையில் விவசாயிகளுக்குத்தான் இந்த பட்ஜெட் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளாரே ஒழிய, ஆனால் உற்றுநோக்கிப் பார்த்தால், படஜெட்டை முழுமையாக படித்துப் பார்த்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

வேலை வாய்ப்பு உருவாகாத நிலை இருக்கிறது. ஏற்கெனவே ஒரு வருடத்திற்கு 1 கோடி பேருக்கு வேலை என்று கூறினர். ஆனால் இதுவரை மூன்றரை ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்குத்தான் வேலை வாய்ப்பு அளித்துள்ளனர். எனவே இந்த பட்ஜெட்டும் ஏமாற்றும் வகையில் இருக்கின்றது, என்றார்.

மேலும் அவர் கூறும்போது, மக்கள் வரிப்பணத்தில்தான் மத்திய அரசு நடைபெறுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்காமல் கொள்ளை அடிக்கின்றனர். வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்பதால் அரசு சம்பளம் வாங்குவோர் ஏமாற்றமடைந்துள்ளனர். கறுப்புப் பணம் ஒழிப்பு பற்றி இதுவரை மத்திய அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, டெல்லி ஆகியவை மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.''

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x