Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பயிர் கடன்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர்.

அந்தக் குறைகளை எல்லாம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிறகு, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் விவசாயிகளிடையே பேசியதாவது:

“திருவள்ளூர் மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 1,500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

விவசாயத்தை தடையின்றி செய்திட ஏதுவாக கூட்டுறவுத் துறை வாயிலாக நடப்பாண்டுக்கு, விவசாயிகளுக்கு 90கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 2,125 விவசாயிகளுக்கு 13.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஓராண்டுக்குள் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரித்திடவும், கோமாரி நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றிடவும், மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வரும் செப். 1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x