Published : 11 Feb 2018 05:57 PM
Last Updated : 11 Feb 2018 05:57 PM

சாதி மறுப்புத் திருமணம் செய்த மகள் மீதான கோபத்தில் மனைவியை ஒதுக்கி வைத்த கணவன்: மாமியாருக்கு அடைக்கலம் தந்த தலித் மருமகன்

இந்த ஆண்டும் உலகமே காதலர் தினம் கொண்டாட உள்ளது. ஆதலினால் காதல் செய்வீர் என்றார் பாரதி. இருக்கிற கொடுமைகளிலேயே மனிதனுக்கு மனிதன் தீண்டத்தகாதவர்களாக இம்சிக்கும் கொடுமை சாதியில் மட்டுமே இருக்கிறது. அது அறவே ஒழிய வேண்டும் என்றால் ஆதலினால் காதலிப்பீர் என்பதுதான் முற்போக்காளர்களின் பிரச்சாரமாகவும் உள்ளது.

சாதி என்பதே ஆணவத்தின் வெளிப்பாடு. அதை ஒரு கவுரவமாகக் கருதுபவர்கள் இன்னமும் சாதியை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம். நடுத்தர சாதிகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டால் கலப்பு மணம். அதுவே தலித் ஒருவரை அதற்கு மேல் படிநிலை சாதிக்கார பெண் திருமணம் செய்தால் அது சாதி மறுப்பாகிறது. இன்றைக்கு கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் ஆகிய இரண்டுக்குமான வித்தியாசம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களுக்கு கூட தெரிவதில்லை.

இந்த இரண்டுக்குமான இடைவெளி தோற்றப் பிழையில்தான் ஆணவக் கொலை என்கிற விஷயமும், ஊரை விட்டு, குடும்பத்தை விட்டு வாழ்நாள் முழுவதும் ஒதுக்கி வைக்கும் நிலை தொடர்கிறது.

கடந்த ஆண்டு அந்த விஷயத்தில் உலுக்கிய சம்பவம் உடுமலை சங்கர்-கவுசல்யாவின் சாதி மறுப்புத் திருமணம். அதில் சங்கர் கொல்லப்பட்டார். கொல்லப்பட இருந்து தப்பித்தார் கவுசல்யா. இதில் சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகளில் 6 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய். 'பெற்ற தாயானாலும் விடமாட்டேன். அவருக்கும் தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே தீருவேன்!' என்று கவுசல்யா சூளுரைத்தார்.

'பெத்து வளர்த்து ஆளாக்கி, நெஞ்சொடிச்சு படிக்க வச்சு, பாதுகாத்தவங்களுக்கு பெத்த மகள் கொடுககிற பரிசா இது? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அவளும் பெண்தானா?' என்றும் கூட இதிலும் சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருந்தனர்.

'பெறலாம். வளர்க்கலாம். படிக்க வைக்கலாம். தங்கத் தொட்டிலிலேயே சீராட்டியிருக்கலாம். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் அவளையும், அவள் கணவனையும் கொலை செய்யத் துணிவது, கொலை செய்தது எவ்வளவு பெரிய பயங்கரம். தினம்தோறும் அமுதூட்டி ஒருநாள் அதிலேயே விஷத்தை வைத்தால் அவர்கள் பெற்றவர்களா?' என்று இதற்கும் எதிர்வினை புறப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அந்த வலியை யாரும் அனுபவித்தால்தான் தெரியும்.

இதோ, அப்படிப்பட்ட ஒரு வலியை 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஒரு தாய். சாதி மறுப்புத் திருமணம் செய்த மகளை புறக்கணிப்பதைக் கூட பார்த்துப் பார்த்து ரணமாகி மழுங்கிப் போய்விட்டோம். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகளைப் பார்க்கப் போன ஒரே காரணத்திற்காக அவள் தாயும் அவள் கணவனால் சாதிப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டாள்.

அந்த தாயை இன்றளவும் அந்த தலித் மருமகனும், அவனை கைப்பிடித்த மகளும்தான் தன்னுடன் வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை?

அப்படிப்பட்ட வித்தியாசமான விநோதமான காதல் மற்றும் துயரக்கதையை கேளுங்கள்:

கோவையைச் சார்ந்த புஷ்பாவுக்கு 54 வயது. 13 வயது சிறுமியாக இருந்த காலத்தில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். 16-17 வயதில் பக்கத்தில் கிரைண்டர் செய்யும் கம்பெனியில் பணி செய்து வந்த ரங்கசாமியின் மீது காதல் வயப்பட்டார். வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வந்தபோது கடும் எதிர்ப்பு. இத்தனைக்கும் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ரங்கசாமிக்கு சொந்த வீடு. வசதியும் உண்டு. ஆனால் புஷ்பா வீட்டில் 3-வது பெண். ஏழ்மை குடும்பம். எனவே காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் ஜோடிகளே திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு சாந்தி என்று பெயரிட்டு வளர்த்தனர் தம்பதிகள். சாந்தி பிளஸ் 2 முடித்து பக்கத்தில் இருந்த ஜெராக்ஸ் கடையில் பணிக்கும் சேர்ந்தார்.

அந்தக் கடைக்கு வந்து செல்லும் அருந்ததியர் சமூக இயக்கவாதி இளமுருகுவின் மீது காதல் வயப்பட்டார் சாந்தி.

அப்பா, அண்ணனுக்கு (பெரியம்மா மகன்) தெரிய வந்தபோது அடி, உதை மட்டுமல்ல; காலில், கையில் முதுகில் சூடு போட்டார்கள். அதையும் மீறி வெளியேறி இளமுருகுவை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் சாந்தி.

இளமுருகு- சாந்தி தம்பதிக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தன. அவற்றை கணவனுக்கு தெரியாமல் பார்க்கச் சென்றாள் தாய் புஷ்பா. அதைப் பார்த்து மனைவியை சுய சாதி கவுரத்துக்காக தன் வீட்டை விட்டே துரத்தி விட்டார் கணவன். தனக்கு நேர்ந்த துயரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட புஷ்பாவின் கண்களில் துளிர்க்கிறது கண்ணீர்.

''என் புருஷனை பிரிஞ்சு வந்து 10 வருஷமாச்சு. இப்ப அவர் கூடலூர்ல இருக்கிறதா சொல்றாங்க. அவரும் என்னைத் தேடி வரலை. நானும் அவரை தேடிப் போகலை. எனக்கு இருக்கிறது ஒரே பெண். அதுக்கு ஒரு கல்யாணம்னா நான் பாக்காம யார் பார்ப்பா? வீட்ல வந்த எதிர்ப்பையும் மீறி, மத்தவங்களுக்கு தெரியாம கல்யாண மண்டபத்துக்கு போய் பொண்ணு, மாப்பிள்ளையை பார்த்து ஆசிர்வாதம் பண்ணிட்டு உடனே போயிட்டேன். சாந்தி முதல் குழந்தைக்கு முழுகாம இருந்தப்ப, அது பிறந்தப்ப, இரண்டாவது குழந்தை வயித்துல இருந்தப்ப, அதுவும் பிறந்தப்ப எல்லாம் எப்படியோ புருஷனுக்கு தெரியாமலேயே புள்ளையை வந்து பார்த்துட்டு போயிட்டேன்.

அப்ப வரைக்கும் என் புருஷனுக்கு அது தெரியவுமில்லை. அதுக்கப்புறம் ஒரு நாள்தான் பார்த்துட்டார். மருமகனோட சாதியை கொச்சையா சொல்லி, 'அவன் வீட்டுக்குப் போறியே வெட்கமா இல்லை? அவங்கிட்ட வாங்கித் திங்கிறதுக்கு வேறெதாவது திங்க வேண்டியதுதானே?ன்னு மானங்கெட பேசினார். அதையெல்லாம் பொறுத்துட்டுதான் வீட்டுக்குப் போனேன். அப்பவும் ஒரு வாரம் டார்ச்சர். மருமகன் சாதியை சொல்லி திட்டிக்கிட்டே அடி, உதை. நீ அங்கே போனதுனால நம்ம சாதிக்காரங்க காறித்துப்புவாங்கன்னு என்னவெல்லாமோ பேசினார். இனியும் அங்கே இருக்கறது சரியா வராதுன்னுதான் மகள் வீட்டுக்கே வந்துட்டேன்.

அதுலயிருந்து மருமகன் வீடுதான் அடைக்கலம். இப்பவும் நான் வீட்டு வேலைக்குப் போறேன். என் சொந்த பந்தங்க வழியில பார்த்து வீட்டுக்கு வான்னு கூப்பிடுவாங்க. நானும் யதார்த்தமா போவேன். அவங்க வீட்ல விருந்து உபசரிக்கிறாங்களோ இல்லையோ, என் பொண்ணு, என் மருமகன், அந்த சாதிக்காரன் (சாதியை கொச்சையா சொல்லி) வீட்ல எப்படி இருக்கேன்னு சுத்தி, சுத்தி குத்தல் பேச்சுக்குள்ளேயே வருவாங்க. மனசு கஷ்டமாகி புறப்பட்டு வந்துடுவேன். நான் வெளியேறும்போது, என் கண்ணுமுன்னாடியே வீட்டு வாசலை கூட்டிப் பெருக்கி மஞ்சள் தண்ணிய தெளிப்பாங்க. நான் வந்துட்டு போறதால சாதி தீட்டுப்பட்டு, அதை கழிக்கிறதாவும் காதுபடவே சொல்லுவாங்க. அதனால சொந்த பந்தங்க வீட்டுக்கு கூப்பிட்டாலும் போறதை நிறுத்தீட்டேன்!'' என்றார்.

புஷ்பாவின் மகள் சாந்தியிடம் பேசியபோது, ''அவர் அருந்தியர் சங்கத்துல முழுநேரப் பணியாளரா இருக்கார்னு தெரிந்தேதான் காதலித்தேன். திருமணத்திற்கு மண்டப செலவு, பட்டுப்புடவை, கால்செருப்பு முதற்கொண்டு அவரேதான் சொந்த செலவுல எடுத்துக் கொடுத்தார். என் அம்மா வீட்டிற்கு வந்த போது கூட ஒரு துளி கூட முகம் கோணாம அதனால என்ன அத்தை எங்களோட இருங்கன்னு ஏத்துக்கிட்டார்!'' என்றார்.

இளவேனில் என்கிற இளமுருகுவிடம் பேசியபோது, ''என் பிறப்பு மூலமாக தீண்டத்தகாத சாதிய வாழ்வு என்பது எத்தகைய சமூக கொடுமையானது என்பதை உணர்றேன், அதே மாதிரி தீண்டத்தகாத சாதியுடன் மற்றவர் சேர்ந்து வாழ்வதும் எத்தகைய சமூகக் கொடூரமானது என்பதை என் மாமியார் மூலமாக உணர முடியுது. தலித்துகள் உயர் சாதிப் பொண்ணுங்களை வேணும்னே வலை விரிக்கிறாங்க. அவங்க பொண்ணுகளை வசியப்படுத்தறாங்க. அவங்க மூலமா சொத்துகளை வாங்கவும் போட்டி நடக்குது. அப்புறம் அந்த பொண்ணுகளை கைவிட்டுடறாங்கன்னு சாதிக் கட்சி தலைவர்கள் அடிக்கடி பேசறாங்க. புள்ளி விவரமும் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லே.

உண்மையிலேயே தலித் இளைஞர்கள் காதலிச்சு ஒருத்தரை மனைவியா ஏத்துக்கிட்டா அவங்களை கடைசி வரைக்கும் கைவிடமாட்டாங்க. அதுக்கு பிரதிபலனா எதையும் எதிர்பார்க்கவும் மாட்டாங்க. அதுக்கு என்னை மாதிரி உதாரணமா நிறைய பேர் வாழ்ந்துட்டுத்தான் இருக்காங்க. அதை எடுத்துச் சொல்லத்தான் இங்கே ஆளில்லை. ஏன்னா ஏழை சொல் அம்பலமேறாது இல்லீங்களா?''

என்றவரிடம், சரி, உடுமலை சங்கர் கொலை விவகாரத்தில் கவுசல்யா, தன் தாயே ஆனாலும் தண்டனை வாங்கித்தராமல் ஓயமாட்டேன் என்று சொன்னதைப் பற்றி என்ன சொல்கிறார் உங்க மாமியார் என்று கேட்டோம்.

''அவங்க அந்த கொலை செய்தியை டிவியில பார்த்தபோதே அப்செட். இப்படிக்கூட செய்வாங்களா? அதுக எங்கியோ எப்படியோ கண்காணாத இடத்துல வாழ்ந்துட்டுப் போகுதுன்னு விட வேண்டியதுதானே? இப்படியுமான்னு ஓயாம சொல்லிக்ட்டே இருந்தாங்க. அந்த பொண்ணோட அப்பாவுக்கு தூக்குத்தண்டனை கொடுத்துட்டு, அம்மாவை விடுவிச்சதுக்கு கவுசல்யா பேட்டி கொடுத்தப்ப, ''அந்தப் பொண்ணு சரியாத்தான் சொல்லுது. இப்படித்தான் புள்ளை இருக்கோணும்னு சொன்னாங்க!'' என்கிறார் எந்த பிரதிபலிப்பும் காட்டாமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x