Published : 31 Mar 2024 12:46 AM
Last Updated : 31 Mar 2024 12:46 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையாரை, பாஜக மாநிலத் தலைவர் க.அண்ணாமலை நேற்று (மார்ச் 30) மாலை நேரில் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் சம்பந்தி.
இந்நிலையில் இன்று மாலை தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் இல்லத்துக்கு, முதலில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளாருமான கருப்பு எம்.முருகானந்தம், பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி.ஜெய்சதீஷ் ஆகியோர் வந்தனர். அவர்களை வரவேற்ற கிருஷ்ணசாமி வாண்டையார் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் மாலை 6.15 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் கிருஷ்ணசாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை, சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி இன்று வந்துள்ளேன்.
இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் பாக்ஸூக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது என்றார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்: நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பாஜகவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT