Published : 30 Mar 2024 07:43 PM
Last Updated : 30 Mar 2024 07:43 PM
2024-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடித்து பரப்புரையை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு விவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
கனிமொழி: திமுக சார்பாக கனிமொழி கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இம்முறையும் களம் காணுகிறார். கடந்த 26-ம் தேதி கனிமொழி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு மொத்தம் ரூ.57,32,21,177 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், அவர் மற்றும் அவரின் மனைவியின் பெயரில், மொத்தமாக ரூ.9.79 கோடி சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தனது பெயரில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 85 ஆயிரத்து 226 கடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சவுமியா அன்புமணி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். பாமக தலைவரின் மனைவியான இவர் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாண பத்திரத்தில், தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 70 பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படியாக, சவுமியா அன்புமணிக்கு ரூ.60.23 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆற்றல் அசோக்குமார்: ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் போட்டியிடுகிறார். ஆற்றல் எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக்குமார், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசோக்குமார், கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார்.பிரமாணப் பத்திரத்தின்படி, அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளது. அதேநேரம், தனக்கு சொந்த வாகனம் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கதிர் ஆனந்த்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா உட்பட குடும்பத்தினரின் பெயரில் மொத்தம் ரூ.88 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 643 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்: தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த வேட்பு மனுவில், குடும்ப சொத்து மதிப்பு ரூ.21 கோடி எனவும், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை: கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில், கையிருப்பு ரொக்கம் ரூ.5.11 லட்சம். வங்கி இருப்பு ரூ.25,30,492. மனைவி அகிலாவிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.1.56 லட்சம். வங்கி இருப்பு ரூ.1,14,73,275. பங்குச் சந்தை முதலீடு ரூ.1,65,150. ரூ.20,48,000 மதிப்பிலான 320 கிராம் தங்க நகை. கோவை செலக்கரிச்சல் கிராமத்தில் ரூ.53 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம் ஆகிய சொத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விஜய் வசந்த் : கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தின், “ சொத்து மதிப்பு விவரம் - அசையும் சொத்து - ரூ.48,87,89,856. மனைவி நித்யா விஜய் பெயரிலான அசையும் சொத்து ரூ.1,81,82,838. விஜய் வசந்தின் அசையா சொத்து ரூ.13,02,42,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.ராசா: திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில், வங்கி இருப்பு தொகை, வைப்பு தொகை காப்பீடு, வாகனம் உட்பட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரத்து 894. மகள் மயூரியின் பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.2 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 218 உள்ளது.
ராசாவுக்கு சொந்தமாக 108 பவுன் தங்கம் மற்றும் 4.182 கிலோ வெள்ளி, மகளுக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து 972 மதிப்பில் தங்க நகைகள், ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் மக்களவையில் களம் காணுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்பட்ட சொத்து விவரத்தில், கையிருப்பில் 10,000 ரூபாய் பணம் ரொக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரியலூரிலுள்ள இந்தியன் வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் தேர்தல் செலவுகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் யூனியன் வங்கி கிளையில் 13,947 ரூபாய் இருப்பு உள்ளதாகவும், டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கியில் 3,22,595 ரூபாய் இருப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்ட், இன்ஸூரன்ஸ் என அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 2,07,97,903 ரூபாயாக உள்ளது. அசையா சொத்துக்களின் (பூர்விகம்) மொத்த மதிப்பு 28,62,500 ரூபாய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT