Last Updated : 30 Mar, 2024 03:02 PM

1  

Published : 30 Mar 2024 03:02 PM
Last Updated : 30 Mar 2024 03:02 PM

ரங்கசாமியின் துருப்புச்சீட்டாக இருந்த புதுச்சேரி மாநில அந்தஸ்து கோஷம் என்னவானது?

புதுச்சேரி: புதுவையில் சட்டப்பேரவை இருக்கிறது. ஆனால், யூனியன் பிரதேச நிர்வாகம் மத்திய அரசிடம் இருக்கிறது. புதுவையின் ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் தொடர்ந்து தலையிடுகின்றனர். முதல்வரை விட ஆளுநருக்கே இங்கு அதிக அதிகாரம் உள்ளது. மத்தியிலும், புதுவையிலும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஒரே கட்சி என்பதால் பெரிய அளவில் நிர்வாக மோதல் வரவில்லை. அதன்பிறகு அந்த நிலைமை மாற, மாநில அந்தஸ்தின் தேவையைபுதுவை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

புதுவைக்கு மாநில அந்தஸ்துவழங்கக்கோரி, சட்டப்பேரவையில் 1987-ம் ஆண்டு முதல்இதுவரை 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர்களான நரசிம்மராவ், தேவகவுடா, வாஜ்பாய் ஆட்சி காலங்களில் இக்கோரிக்கை கொள்கை அளவில் பரிசீலிக்கப்பட்ட போதும், இதற்கான செயல் வடிவம் முழுமை பெறவில்லை.

‘புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து’ என்ற கோரிக்கையை மத்தியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி முதலில் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால், காங்கிரஸில் இருந்துவெளியேறி 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ரங்கசாமி, இக்கோரிக்கையை பெரும் முழக்கமாக வைத்து ஆட்சியை கைப்பற்றிய பின், காங்கிரஸ் கட்சிக்கு இக்கோரிக்கையின் ஆழம் புரிந்தது. அதன்பின் காங்கிரஸூம் இதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தச் சூழலில் கடந்த சிலமாதங்களுக்கு முன், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரும் எண்ணமில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு தெரிவித்து விட்டது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில், ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கவே இல்லை.

இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறுகையில், மாநில அந்தஸ்து கேட்டு, 2011-ல் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, முன்பெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் அந்தக் கோரிக்கையை முன்னெடுத்து வந்தார். தற்போது அதுவும் இல்லை. இதற்கிடையே, 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்பிறகும் மாநில அந்தஸ்து கோரிக்கை எழுந்தது. ஆனாலும், முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று அதை நேரில் வலியுறுத்தவில்லை.

மத்தியில் யார் ஆண்டாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க விருப்பமில்லாமல்தான் செயல்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்தை பற்றி கட்சியினர் பேசுவார்கள். அதன்பிறகு கண்டு கொள்வதில்லை. மக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

இம்முறை மத்தியில் கூட்டணி வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி, ‘மத்திய அரசைதான் நாம் சார்ந்துள்ளோம்’ என்று வெளிப்படையாகக் கூறி மாநில அந்தஸ்தை பற்றி வாய் திறக்கவே இல்லை. எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் முன்நிறுத்தும் மாநில அந்தஸ்து பற்றி கவனமாக இம்முறை ரங்கசாமி தவிர்க்கிறார்.

தமிழகத்தில் வெளியான தேர்தல் அறிக்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்தை குறிப்பிட்டுள்ளன. புதுச்சேரி திமுகவும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறது என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x