Published : 30 Mar 2024 03:06 PM
Last Updated : 30 Mar 2024 03:06 PM
சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணை ஒருதலைப்பட்சமானது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2021-ஆம் ஆண்டுக்கு முன்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு வழங்கும் முறை இருந்தது. மற்ற அத்தியாவசிய பணியில் இருப்போருக்கு தபால் வாக்கு என்பது இல்லை. 2021-ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் அத்தியாவசிய பணியில் இருக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கு, தபால் வாக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை.
இந்த அறிவிப்பின்படி, தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் ரயிலைச் சார்ந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது வாக்குகளை முழுமையாக செலுத்த இயலாது என்பது மிகவும் பின்னடைவாகும்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணை ஒருதலைப்பட்சமானது. கண்டனத்துக்குரியது. இது ரயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.
தமிழகத்தில் மற்ற பிற பொதுத் துறை நிறுவனங்கள் தபால் வாக்கு செலுத்த உரிமை உள்ள நிலையில் தமிழக ரயில்வே தொழிலாளிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் தமிழக ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment