Published : 30 Mar 2024 09:32 AM
Last Updated : 30 Mar 2024 09:32 AM
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது.
எனவே, இந்த தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக தொடர்ந்த வழக்கில், கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்றது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணிக் கட்சியினர் விசிகவுக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் வீடியோ பதிவை அவர் பகிர்ந்திருந்தார். அத்துடன், 2024 மக்களவைத் தேர்தலில் நமது சின்னம் `பானை'. இந்த சின்னம் நமது உரிமை. இந்த சின்னம் கிடைக்கும் என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT