Published : 30 Mar 2024 08:55 AM
Last Updated : 30 Mar 2024 08:55 AM
சேலம்: மக்களவைத் தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி சேலம் முதல் அக்ரஹாரம் மற்றும் கடை வீதிகளில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு அவர் வாக்கு சேகரித்தார். தேநீர் கடையில் கட்சியினருடன் தேநீர் அருந்தினார். வழிநெடுகிலும் பொது மக்கள் அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, தருமபுரி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் இன்று மாலை சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிராவு சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். தொடர்ந்து இன்று காலையில் சேலம் முதல் அக்ரஹாரம் மற்றும் கடை வீதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
இன்று மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறார். முதல்வர் வருகையை ஒட்டி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT