Published : 29 Mar 2024 11:34 PM
Last Updated : 29 Mar 2024 11:34 PM
உசிலம்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இப்பகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்த என்னை ஆதரியுங்கள் என உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த தினகரன் கூறினார்.
தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டி , உத்தப்புரம் , எழுமலை பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் பல கட்சிகள் கூட்டணியுடன் பலமான கூட்டணியாக இங்கே கூடி இருக்கிறேன். நமது தொகுதி வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் சின்னம். நமது கூட்டணியிலே சகோதரர் ஓபிஎஸ் அணியும் இணைந்து இருக்கிறது.
மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைய குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது இப்பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பெற்று தந்த என்னை மீண்டும் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து கோடாங்கி நாயக்கன்பட்டி, இ.கோட்டைபட்டி, எழுமலை, சூலப்புரம், எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், சாப்டூர், அத்திப்பட்டி, மங்கல்ரேவு, சேடப்பட்டி, சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர் உள்ளிட்ட பகுதியில் குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT