Published : 29 Mar 2024 10:02 PM
Last Updated : 29 Mar 2024 10:02 PM
விருதாச்சலம்: கடலூர் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சில பின்னணி தகவல்களை வெளியிட்டார் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி.
கடலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்றிருந்த நிலையில், முன்னதாக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசும்போது, “கடலூர் தொகுதியில் கடந்த முறை பாமக வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.கோவிந்தசாமியை மீண்டும் நிறுத்த முடிவு செய்து, அவரிடம் கூறியபோது, ‘தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும், தன்னால் போட்டியிட முடியாது’ என தவிர்த்து விட்டார்.
அதையடுத்து தங்கர் பச்சானை தொடர்புகொண்டு பேசியபோது, ‘நானா போட்டியிடுவது’ என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பினார்” என்றார். இதையடுத்து பேசிய ராமதாஸ், “நேரு குடும்பத்தை தவிர்த்து வேறொருவர் 3-வது முறையாக பிரதமராகப் போகிறார். அவர் பாஜகவைச் சேர்ந்த மோடி என்பதால் ஆதரிக்கிறேன். காங்கிரஸ் மக்களுக்கு தேவையற்ற கொள்கைகளை கொண்டிருந்ததால் அது பிடிக்காமல் அண்ணா, திமுகவை உருவாக்கினார். அத்தகைய காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் இங்கு போட்டியிடுகிறார். யார் யாரோ எங்கிருந்தோ வந்து இங்கு போட்டியிடுகிறார்கள்.
நமது வேட்பாளர் நல்ல வேட்பாளர். பண்பானவர். இந்த மண்ணின் மைந்தர். அவரிடம் நீதான் கடலூரில் போட்டியிட வேண்டும் என கூறியபோது, அவர் சிறிது நேரம் அமைதியா இருந்தார். அப்போது நம்ப முடியவில்லையா எனக் கேட்டபோது, ஆமாம் என்றார். எனவே இது வித்தியாசமான கூட்டணி. தங்கர் பச்சான் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். எளிமையானவர், உங்கள் கோரிக்கைகளை உள்வாங்கி மக்களவைக்குக் கொண்டு சென்று அதற்கு தீர்வு காண முடியும். இந்த மண்வாசனை பற்றி, தங்கர்பச்சானுக்குத் தெரியாமல், வேறுயாருக்குத் தெரியும்.
வேறு மாவட்டத்திலிருந்து வந்தவர்களுக்கா தெரியும். இவரால் வாக்குக்கு பணம் கொடுக்க முடியாது. ஏனெனில் அவர் கொள்ளையடிக்கவில்லை. அவர் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். நாங்கள் தேடிப்பிடித்து நீங்கள் நிற்க வேண்டும் என கூறிய போது, அவர் ஆச்சரியப்பட்டு ‘நானா’ என மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆமாம் நீங்கள் தான் நிற்கவேண்டும் எனக் கூறினோம். எனவே தங்கர் பச்சானுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT