Published : 29 Mar 2024 10:08 PM
Last Updated : 29 Mar 2024 10:08 PM

அண்ணாமலையிடம் மோடி தந்த ‘அசைன்மென்ட்’ - பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பகிர்வு

சென்னை: “மக்களவைத் தேர்தலில் மொத்த தமிழகத்தையும் இந்த முறை வென்று வரவேண்டும் என்று அண்ணாமலைக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்” என்று தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ‘எனது பூத் வலிமையான பூத்’ எனும் பெயரில் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மாலை கலந்துரையாடினார். அப்போது அவர், “திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சியைத் தொடங்கிய நாளில் இருந்து மக்களுக்கு ஆதரவான நிலையில் இல்லாமல், குழப்பத்திலும் ஆபத்திலும் கொண்டு செல்லும் ஆட்சியாகத்தான் இருந்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் ஊழல்.

அதேபோல் சட்டம் - ஒழுங்கு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இந்த அரசின் வேலையாக உள்ளது. குறிப்பாக, போதைப் பொருள் கடத்தல். ஆட்சியில் இருப்பவர்களால்தான் இதெல்லாம் நடக்கிறது என நினைக்கும்போது, மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

நான் பலமுறை பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழகத்துக்கும் பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், இந்தமுறை வந்தபோது, திமுகவின் ஊழல், திமுக மீதான குற்றச்சாட்டுகள், வாரிசு அரசியல், மீதும் தமிழக மக்கள் கோபத்துடன் இருப்பதைவிட வெறுத்துப் போயுள்ளனர். மக்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று தங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் இப்போது இருக்கிறார்கள் என்று எனக்கே ஓர் உணர்வு வந்தது.

பாஜக அரசு எத்தனை நல்ல திட்டங்களை மக்களுக்காக கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதைக்கண்டு மாநில அரசு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக பயப்படுகின்றனர். மோடி அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுவோமோ, எங்கே மக்கள் அவர்களை விரும்பத் தொடங்கி விடுவார்களோ என பதறுகின்றனர். இதனால், அவர்களின் பயமும் பதற்றமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் நல்லத் திட்டங்களை எல்லாம், மக்களைச் சென்றடையாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.

ஒரு சில திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றே ஆக வேண்டிய நிலை வரும்போது, அதில் அவர்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி பெயரை மாற்றிக் கொண்டுபோய் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். எனவே, பூத் கமிட்டி நிர்வாகிகள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இது பூத் அளவில் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒரு வேலை. தமிழகத்தின் மீது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது.

நான் அண்ணாமலைக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினேன். அவர் மொத்த தமிழகத்தையும் இந்த முறை வென்று வரவேண்டும் என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன். இதனால், அவருக்கு தன்னுடைய தொகுதியில் பணியாற்றுவதற்கு நேரம் இருக்காது. அவர் தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் இருப்பார்.

எனவே, கோவையில், உள்ள பூத் நிர்வாகிகள், அண்ணாமலையின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நான் தமிழகத்தில் நிற்கும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாமலை ஆகத்தான் பார்க்கிறேன். எனவே, அனைவரும் வெற்றி பெற்று டெல்லிக்கு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

9 கட்சிகள் நம்முடைய கூட்டணியில் நவரத்தினங்களாக உள்ளனர். தேர்தல் வேலைகள் செய்யும்போது, இந்த நவரத்தினங்களையும் ஒன்றாக சேர்த்து பூத்தில் நில்லுங்கள். அது மிகப் பெரிய பலம் நமக்கு. ஒன்றாக இணைந்து பணி செய்யும்போதுதான், நம்முடைய வெற்றி உறுதி செய்யப்படும்.

கோவைக்கு நான் வந்தபோது மக்கள் எனக்கு அளித்த ஆதரவு மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது. ஆனால், அது மிக எளிதாக சாத்தியப்படாது. பலரது கடுமையான உழைப்பின் காரணமாகத்தான் அந்த வரவேற்பு கிடைத்தது.

ஒவ்வொரு பூத்திலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. வெற்றிக்கான ரகசியம் பூத்தில்தான் அடங்கியிருக்கிறது. போரில் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளின் கண்காணிப்புப் பகுதிகளை எல்லாம் நாம் தகர்த்தெறிந்து செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு பூத்திலும் நாம் வெற்றி பெறும்போதுதான், ஒட்டுமொத்த நாடாளுமன்றம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு பூத் கமிட்டித் தலைவரும் தங்களது பூத்தின் வெற்றியை உறுதி செய்து விட்டால், நாடாளுமன்றம் நமக்கு கிடைத்துவிடும்.

தமிழகத்தில் பாஜக தலைவர்களைப் பற்றி மக்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தாமரை சின்னம் அனைவருக்கும் அறிமுகமாகிவிட்டதா? அவர்கள் வாக்களிக்கப்போவது சின்னத்தைப் பார்த்துதான். எனவே, சின்னத்தை மக்களிடம் சரியான வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் பாஜக கொடி மற்றும் சின்னத்துடன் ஊர்வலமாக செல்ல வேண்டும். அதுபோல் இவிஎம் இயந்திரத்தில் எத்தனையாவது இடத்தில் சின்னம் உள்ளது என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x