Published : 29 Mar 2024 09:48 PM
Last Updated : 29 Mar 2024 09:48 PM
தருமபுரி: "சமூக நீதி பேசும் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கைகோத்த மர்மம் என்ன? பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக் கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பாஜக. இது, மூத்த தலைவரான உங்களுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பாமகவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்" என்று தருமபுரியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி, பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும் என்றால், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும் என்றால், எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் என்றால், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் இந்திய தேசியக் கொடி கம்பீரமாக டெல்லி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால், முதலில் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இண்டியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
பாஜக என்பது சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத, இன, சாதி, மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பாஜக. அப்படிப்பட்ட, பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு. ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூக நீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்.
சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது. இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை.
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றும் அரசை மத்தியில் அமைக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியை வலுவாக அமைத்திருக்கிறோம். அந்த வகையில், இண்டியா கூட்டணி, மக்களின் நலனுக்காக, மக்களுக்காகவே பாடுபடும் கட்சிகளின் கூட்டணியாக கம்பீரமாக உங்களுக்காகக் களத்தில் போராடுகிறோம்.
தன்னை ஒரு சாமானியன் என்று அறிவித்துக் கொண்டு, சாமானிய மக்களுக்காக ஆட்சி நடத்தினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. 1969-ல் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என்று அந்த மக்கள் பயனடையத் தனித்தனியாகத் துறையை உருவாக்கியவர் அவர்தான். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, சமூகநீதிக்குப் புதிய பாதை அமைத்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்று முன்னேறி இருப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
மற்றொன்றையும் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதிதான்.
வன்னியர் சமுதாய மக்கள் 1987-ம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள். தனி இடஒதுக்கீடு கேட்டுக் கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது. ஆனால், அதிமுக ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. மறைந்த முதல்வர் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதல்வரானதும், ஆட்சிக்கு வந்த 43-வது நாளில் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொடுத்தார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இடஒதுக்கீடுதான் அது.
வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார். 1987-ம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள்.
சமூகநீதித் தியாகிகளான அவர்களைப் போற்றி மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் திறக்கப்பட இருக்கிறது. சொன்னதைச் செய்த பெருமையுடன் நான் உங்கள் முன்னால் வாக்கு கேட்டு நிற்கிறேன். இந்த நேரத்தில் சில பேர் மறந்துபோன, மறைக்க நினைக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டுக்கு, மறைந்த முதல்வர் கருணாநிதியை அழைத்த ராமதாஸ், அன்றைக்கு மேடையில் என்ன பாராட்டிப் பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் மறந்தாலும் வன்னிய சமுதாய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1987-ம் ஆண்டுமுதல் இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை.
அன்றைக்கு இருந்த அதிமுக முதல்வரைப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து இடஒதுக்கீடு தந்த உங்களுக்கு நன்றி. இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தரவில்லை என்றால், இங்கு மத்திய அமைச்சர் சொன்னதைப்போல், கூலி வேலை செய்துவிட்டு, ஓட்டு மட்டும் போடும் ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, மறைந்த முதல்வர் கருணாநிதியையே சாரும்" என்று சொன்னீர்களே, அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திமுக.
கடந்த தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி முறிந்ததும், அதிமுகவும் - பாமகவும் மாறி மாறி, அவர்கள் ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றி, குற்றம் சொல்லுகிறார்களே? என்னவெல்லாம் பேசுகிறார்கள் என டிவியில் பார்க்கிறோமே, அதையெல்லாம் இப்போது சொல்லி, இந்த மேடையின் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சிக்கு, சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தியும், வன்னிய அடிகளாரும், சி.என்.ராமமூர்த்தியும் மறைந்த முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, சென்னை ஹால்டா சந்திப்பில் சிலை அமைத்தார். அந்த நிகழ்ச்சியில், மறைந்த முதல்வர் கருணாநிதியுடன் சென்னை மேயராக இந்த அடியேனும் கலந்து கொண்டேன். எந்தச் சமூகமாக இருந்தாலும் அந்தச் சமூகத்தின் மேன்மைக்காகத் திட்டங்களைத் தீட்டித் தரும் சமூகநீதி இயக்கம்தான் திமுக.
ஆனால் சமூக நீதி பேசும் மருத்துவர் ராமதாஸ் , சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கை கோத்த மர்மம் என்ன? பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பாஜக. இது, மூத்த தலைவரான உங்களுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பாமகவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்.
ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பாஜக. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியையே பாஜக. கவிழ்த்ததே. இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பாஜக செய்திருக்கிறது. அதை மறந்துவிட்டாரா?
பாமகவின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பாமக பாடுபடும் என்று சொல்கிறார்.
நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? ராமதாஸ் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பாஜக.
இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிராரே?
இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார். நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும். சென்சஸ் எடுக்க முடியாது. இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதிப் போராளியான ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார். அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை. யார் என்ன சொன்னாலும், அண்ணா வழியில், “வாழ்க வசவாளர்கள்” என்று நம்முடைய திராவிட மாடல் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேசம், ஒரு ரூபாய் கொடுத்தால், டபுள் மடங்காக நிதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழகத்துக்கு மட்டும் ஒரு ரூபாய் கொடுத்தால், வெறும் 29 பைசா மட்டும் திருப்பி கொடுப்பது ஓரவஞ்சனை இல்லையா? அதுமட்டுமா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும், சிறு – குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டியால் எப்படி நலிந்து போயிருக்கிறார்கள்? அசோக் லேலண்டு, டிவிஎஸ், ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் 2500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஓசூரில் இருக்கின்றன. இந்த உதிரிபாகங்களுக்கும் 28 விழுக்காடு ஜிஎஸ்டி போட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் பாடா படுது, இவர்களுக்காக நீங்கள் என்றைக்காவது கவலைப்பட்டதுண்டா?
மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து, அதை எதிர்த்த விவசாயிகளை ஏதோ தீவிரவாதிகளைப்போல் எப்படி கொடுமைப்படுத்தினீர்கள்? இன்றைக்கும் தலைநகர் டெல்லியில் விவசாயிகளை நுழைய விடாமல் சாலை முழுவதும் ஆணி அடித்தீர்களே, விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் கொடுமை மாதிரி, இந்திய வரலாற்றிலேயே எந்தப் பிரதமரும் செய்திருக்க மாட்டார்கள். ஏன், உலக வரலாற்றில்கூட, எந்த சர்வாதிகாரியும் செய்திருக்க மாட்டார்கள்.
பிரதமர் மோடியின் பத்தாண்டுகால ஆட்சியின் அடையாளம் என்ன? ரஃபேல் ஊழல், சிஏஜி ஊழல், தேர்தல் பத்திர ஊழல் இதற்கெல்லாம் பதில் எங்கே? இதற்கெல்லாம் தேர்தலுக்குப் பின், நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 12 ஆண்டு காலம் குஜராத் முதல்வராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, டெல்லிக்குச் சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாகத் துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது. மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார்.
பிரதமர் மோடி, நீங்கள் எஜமானர் அல்ல. மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள். அதை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் மக்களிடம் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைக்கும்போதே தெரிந்துவிட்டதே. ஆண்டுதோறும்தான், மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் குறைக்காதவர், தேர்தல் வருகிறது என்று இந்த வருடம் குறைக்கிறார். சிலிண்டர் விலையை உயர்த்தியது யார்? இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான். தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது யார்? அதுவும், இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. அரசு புதியதாக எதையும் அறிவிக்கக் கூடாது. ஆனாலும், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் மேல் ஏன் இந்த திடீர் கரிசனம்? பாசம்? இரக்கம்? பிரதமர் மோடி அவ்வளவு இரக்கமும் - பாசமும் உடையவர் என்றால், கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்தை இவ்வளவு நாள் ஏன் முடக்கி வைத்தீர்கள்? காங்கிரஸ் கொண்டு வந்தால் என்ன, ஏழை மக்களுக்குதானே பயன்படுகிறது என்று, ஒரு அடிப்படை மனிதாபிமானத்துடன் செய்தீர்களா? இல்லையே?
அப்படி என்றால், இந்த திட்டத்தை முடக்கியதற்கு காரணம், காங்கிரஸ் மேல் இருக்கும் வன்மம் மட்டுமல்ல. ஏழை மக்களை வஞ்சிக்கும், எண்ணம்தான் காரணம். எப்படியெல்லாம் நூறு நாள் வேலைத்திட்டத்தைச் சீரழித்தார்கள். அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஒதுக்கப்பட்டு வந்த நிதியையும், ஓரவஞ்சனையுடன் குறைத்தீர்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஆண்டுக்குச் சராசரியாக நாற்பது நாட்கள் மட்டுமே வேலை கொடுத்து, இந்தத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து, சின்னாபின்னப்படுத்தினார்கள்.
கார்ப்பரேட்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, ரத்தம் சிந்தி உழைக்கும் ஏழைகளுக்கு, உதவியாக இருக்கும் திட்டத்தை சீரழித்து வேடிக்கை பார்த்தது. நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் பார்த்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 294 ரூபாயிலிருந்து, 319 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். அடேங்கப்பா, மக்கள் மேல் எவ்வளவு அக்கறை. அவ்வளவு அக்கறை இருக்கிறவர், இதையெல்லாம் தேர்தலுக்கு முன்னால் ஏன் செய்யவில்லை? ஏன் என்றால், இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். திரும்பவும் நாங்கள் உறுதியோடு சொல்கிறோம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், வேலைவாய்ப்பு நாட்களை, 150 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தையும் 400 ரூபாயாக உயர்த்துவோம்.
நேற்று ஒரு செய்தி பார்த்தேன். நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போது, நிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்னாரே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர் பேசிய செய்தி. இவர்கள் பிச்சை என்று சொன்னதும், நான் என்ன சொன்னேன்? அவரை, ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள். மக்கள் உங்களுக்குச் சொல்லும் பதிலில், ’பிச்சை’ என்ற சொல்லே இனி உங்கள் ஞாபகத்துக்கு வராது என்று சொன்னேன்.
ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட அவரிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்வது யார்? சாதாரண மக்களின் பேங்க் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கிறவர்கள் சொல்கிறார்கள். இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பாஜக வேட்பாளர்கள் நிற்கிறார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்?
தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும். மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். உங்களுக்கே தெரிந்துவிட்டது. தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, தப்பிவிட்டீர்கள்.
தமிழக மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பாஜகவை ஒதுக்கத்தான் போகிறார்கள். பாஜகவுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்களும், கள்ளக் கூட்டணியாகத் தமிழகத்துக்கு துரோகமிழைக்கும் பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக, தமிழகத்தை வஞ்சித்த பாஜக அதனுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள பாமக என்று இந்த மக்கள் விரோதக் கூட்டத்தை தோற்கடிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT