Published : 29 Mar 2024 09:27 PM
Last Updated : 29 Mar 2024 09:27 PM

செய்தித் தெறிப்புகள்: காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ் முதல் தங்கம் விலை புதிய உச்சம் வரை

ரூ.1,823 கோடி நிலுவை - காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ்: 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்துக்கான வரி நிலுவை மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடியை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல், ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், கடந்த சில ஆண்டுகளாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதமும் அடங்கும்.

சி-விஜில் செயலியில் இதுவரை 79,000+ புகார்கள் பதிவு: தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

“அண்ணாமலை கனவு காணலாம்... வெற்றி எங்களுக்கே!” - கனிமொழி: "தேர்தலில் 60 சதவீதம், 90 சதவீதம், 100 சதவீதம் வாக்கு வாங்குவதாக கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை. ஆனால், வெற்றி எங்களுக்குத்தான்" என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

மேலும், “போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது” தான் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

“காசுக்கு வாக்கு வாங்கும் நிலை வந்தால்...” - சீமான் ஆவேசம்: "ரூ.100 கோடி, ரூ.150 கோடி என செலவழித்து, உங்களது வாக்குகளை காசு கொடுத்து வாங்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி இல்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம்" என்று தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பிஹாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு: பிஹார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

கேஜ்ரிவால் கைது - ஐ.நா. கருத்து: “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கேஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்து ஐ.நா கருத்து தெரிவித்துள்ளது.

“அன்று ராப்ரி தேவி... இன்று சுனிதா கேஜ்ரிவால்...” : "பிஹாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா" என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக அவரது மனைவி சுனிதா ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்ற வாட்ஸ் அப் பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாழ்த்துகள் அனுப்ப வாட்ஸ் அப் எண் ஒன்றை அவர் அறிவித்துள்ளார்.

உ.பி சிறையில் முக்தார் அன்சாரி மரணம்: உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம் அடைந்தார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ‘உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்’ என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. தங்கத்தின் விலை அன்றாடம் அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை, குறிப்பாக சாமானிய மக்களை கவலையடையச் செய்துள்ளது.

முதல்முறையாக இணைந்த அம்பானி - அதானி: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், அதானியும் முதல் முறையாக இணைந்து செயல்பட உள்ளது உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ‘அதானி பவர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘மஹான் எனர்ஜென்’ நிறுவனத்தில்தான் 26 சதவீத பங்குகளை அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’வாங்கியுள்ளது.

ஆப்கனில் பெண்களுக்கு மீண்டும் கசையடி தண்டனை: ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.

விருதுநகரில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வாகன சோதனை நடத்தினர். அப்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சவுமியா அன்புமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு: மேட்டூர் அடுத்த மேச்சேரியில் உரிய அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தியதாக பாமக வேட்பாளர், கவுரவ தலைவர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x