Published : 29 Mar 2024 09:13 PM
Last Updated : 29 Mar 2024 09:13 PM
புதுடெல்லி: "பாஜக அரசு எத்தனை நல்ல திட்டங்களை மக்களுக்காக கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதைக் கண்டு மாநில அரசு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக பயப்படுகின்றனர். மோடி அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுவோமோ, எங்கே மக்கள் அவர்களை விரும்பத் தொடங்கி விடுவார்களோ என பதறுகின்றனர். இதனால், அவர்களின் பயமும் பதற்றமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் நல்லத் திட்டங்களை எல்லாம், மக்களைச் சென்றடையாமல் தடுத்து நிறுத்துகின்றனர்" என்று தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ‘எனது பூத் வலிமையான பூத்’ எனும் பெயரில் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது: "நம்ம கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், இன்னொரு நிர்வாகிக்கு எப்போது வணக்கம் சொல்கிறாரோ, அப்போது அங்கு ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமத்துவம் வருகிறது. இதுதான் நம் கட்சியின் மிகப்பெரிய பலம்.
ஓர் உதாரணம், ஒரு மனிதன் எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும், வாழ்க்கையின் எத்தனை பெரிய உயரத்தில் இருந்தாலும், தன்னுடைய பள்ளி தோழனைச் சந்திக்கச் செல்லும்போது தான் ஒரு பெரிய மனிதன் என்ற எண்ணத்திலா சந்திக்கச் செல்வான். அவர்கள் எப்படி அன்புடன், நட்புடன் ஆரத்தழுவி கைக்குலுக்கிக் கொள்வார்களோ, அதுபோல் உங்களுடன் உரையாற்றும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம், நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை உங்களைப் போன்ற காரியகர்த்தவாகத் தான் கழித்தேன். அதனால், உங்களுடன் நான் உரையாடும்போது, கூடுதலான மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் அனைவரும் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த உழைப்பு கட்சியை வளர்ச்சி நோக்கி நீண்ட பாதையில் எடுத்துச் செல்கிறது. என்னுடைய பூத், வலிமையான பூத் எனும் நம்முடைய முழக்கத்துக்கு உங்கள் ஒவ்வொருவரின் உழைப்புதான் காரணம். இந்தக் கூட்டத்தின் மூலம் உங்களிடம் பேசும்போது, உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ளவும், புரிந்து கொள்ளவும், உங்களது எண்ணங்களை அறிந்து கொள்ளவும், பூத் மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், மிக பயனுள்ள சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.
தேர்தலுக்காக அனைவரும் மிக வேகமாக அனைவரும் பணியாற்றி வருகிறீர்கள். அனைத்து வேட்பாளர்களும் தயாராகிவிட்டனர். தேர்தலுக்கான பல விஷயங்கள் இப்போது தயாராக உள்ளது. இந்த தேர்தலின் வேகமான சூழ்நிலையில்தான், உங்கள் அனைவரையும் நான் சந்தித்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
நான் இப்போது சமீபத்தில் தமிழகத்துக்கு வந்திருந்தேன். அப்போது அங்கு மக்கள் எனக்கு தந்த அன்பையும், வரவேற்பையும் பார்க்கும்போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.இத்தனை ஆர்வமாக தானாக முன்வந்து மக்கள் இப்படி அன்பு செலுத்துகின்றனரே என நான் வியந்து போனேன். அதன்மூலம் நான் ஒவ்வொரு காரியகர்த்தாவின் உழைப்பையும் நான் தெளிவாக தெரிந்துகொண்டேன். நான் என்ன பாக்கியம் செய்தேன். எதனால், மக்கள் என் மீது இப்படி அன்பு காட்டுகின்றனர் என்பதை நினைத்து நான் மிகுந்த பெருமைப்பட்டேன், மகிழ்ச்சியடைந்தேன்.
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சியைத் தொடங்கிய நாளில் இருந்து மக்களுக்கு ஆதரவான நிலையில் இல்லாமல், குழப்பத்திலும் ஆபத்திலும் கொண்டு செல்லும் ஆட்சியாகத்தான் இருந்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் ஊழல். அதேபோல் சட்டம் - ஒழுங்கு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இந்த அரசின் வேலையாக உள்ளது. குறிப்பாக, போதைப் பொருள் கடத்தல். ஆட்சியில் இருப்பவர்களால்தான் இதெல்லாம் நடக்கிறது என நினைக்கும்போது, மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
எனவே, நீங்கள் இந்த ஆட்சியின் அவலங்களை எல்லாம் கிராமம் தோறும், பூத் தோறும், ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல். ஏப்ரல் 17ம் தேதி மாலையே பிரச்சாரத்தை நிறுத்த வேண்டியுள்ளது. எனவே, மீதமுள்ள 15 - 16 நாட்களில், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை, மகளிர், விவசாயிகள், மீனவர்கள், முதல்முறை வாக்காளர்கள், மத்திய அரசின் திட்ட பயனாளிகள் என குழுவாக அழைத்து ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துங்கள்.
டெல்லியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் என்ன கூறுகின்றனர் என்றால், தமிழகத்தின் எண்ணமே மாறிவிட்டது. தமிழக மக்களின் சிந்தனையே புதிதாக மாறிவிட்டது. பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு காரணம், தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் மீதான கோபம். அதேநேரம் மத்திய அரசின் மீது உள்ள அனுகூலமான ஒரு பார்வை. இவையெல்லாம் சேர்த்து தமிழக களத்தில் பெரிய ஒரு மாற்றம் வந்திருப்பதாக கூறுகின்றனர். டெல்லி முழுக்க இந்தப் பேச்சு பரவலாக பேசப்படுகிறது.
நான் பலமுறை பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழகத்துக்கும் பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், இந்தமுறை வந்தபோது, திமுகவின் ஊழல், திமுக மீதான குற்றச்சாட்டுகள், வாரிசு அரசியல், மீதும் தமிழக மக்கள் கோபத்துடன் இருப்பதைவிட வெறுத்துப் போயுள்ளனர். மக்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று தங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் இப்போது இருக்கிறார்கள் என்று எனக்கே ஓர் உணர்வு வந்தது.
பாஜக அரசு எத்தனை நல்ல திட்டங்களை மக்களுக்காக கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதைக்கண்டு மாநில அரசு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக பயப்படுகின்றனர். மோடி அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுவோமோ, எங்கே மக்கள் அவர்களை விரும்பத் தொடங்கி விடுவார்களோ என பதறுகின்றனர். இதனால், அவர்களின் பயமும் பதற்றமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் நல்லத் திட்டங்களை எல்லாம், மக்களைச் சென்றடையாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.
ஒரு சில திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றே ஆக வேண்டிய நிலை வரும்போது, அதில் அவர்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி பெயரை மாற்றிக் கொண்டுபோய் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். எனவே, பூத் கமிட்டி நிர்வாகிகள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இது பூத் அளவில் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒரு வேலை.
தமிழகத்தின் மீது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. இதை தமிழகத்துக்காக மட்டும் கூறவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து பாஜக பூத் நிர்வாகிகளுக்காகவும் கூறுகிறேன். 3-4 பூத் நிர்வாகிகள், ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட வேண்டும். அந்த கருத்துப் பரிமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய பலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். இதனால், நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இதுபோன்ற கலந்துரையாடல் மூலம், மிகப்பெரிய வெற்றிகளை பூத் அளவில் நம்மால் குவிக்க முடியும்.
நான் அண்ணாமலைக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினேன். அவர் மொத்த தமிழகத்தையும் இந்த முறை வென்று வரவேண்டும் என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன். இதனால், அவருக்கு தன்னுடைய தொகுதியில் பணியாற்றுவதற்கு நேரம் இருக்காது. அவர் தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் இருப்பார். எனவே, கோவையில், உள்ள பூத் நிர்வாகிகள், அண்ணாமலையின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நான் தமிழகத்தில் நிற்கும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாமலை ஆகத்தான் பார்க்கிறேன். எனவே, அனைவரும் வெற்றி பெற்று டெல்லிக்கு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
9 கட்சிகள் நம்முடைய கூட்டணியில் நவரத்தினங்களாக உள்ளனர். தேர்தல் வேலைகள் செய்யும்போது, இந்த நவரத்தினங்களையும் ஒன்றாக சேர்த்து பூத்தில் நில்லுங்கள். அது மிகப் பெரிய பலம் நமக்கு. ஒன்றாக இணைந்து பணி செய்யும்போதுதான், நம்முடைய வெற்றி உறுதி செய்யப்படும். கோவைக்கு நான் வந்தபோது மக்கள் எனக்கு அளித்த ஆதரவு மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது. ஆனால், அது மிக எளிதாக சாத்தியப்படாது. பலரது கடுமையான உழைப்பின் காரணமாகத்தான் அந்த வரவேற்பு கிடைத்தது.
ஒவ்வொரு பூத்திலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. வெற்றிக்கான ரகசியம் பூத்தில்தான் அடங்கியிருக்கிறது. போரில் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளின் கண்காணிப்புப் பகுதிகளை எல்லாம் நாம் தகர்த்தெறிந்து செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு பூத்திலும் நாம் வெற்றி பெறும்போதுதான், ஒட்டுமொத்த நாடாளுமன்றம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு பூத் கமிட்டித் தலைவரும் தங்களது பூத்தின் வெற்றியை உறுதி செய்து விட்டால், நாடாளுமன்றம் நமக்கு கிடைத்துவிடும்.
தமிழகத்தில் பாஜக தலைவர்களைப் பற்றி மக்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தாமரை சின்னம் அனைவருக்கும் அறிமுகமாகிவிட்டதா? அவர்கள் வாக்களிக்கப்போவது சின்னத்தைப் பார்த்துதான். எனவே, சின்னத்தை மக்களிடம் சரியான வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் பாஜக கொடி மற்றும் சின்னத்துடன் ஊர்வலமாக செல்ல வேண்டும். அதுபோல் இவிஎம் இயந்திரத்தில் எத்தனையாவது இடத்தில் சின்னம் உள்ளது என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார். இந்த உரையாடலின்போது, பிரதமருடன் தமிழகத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT