Last Updated : 29 Mar, 2024 08:18 PM

1  

Published : 29 Mar 2024 08:18 PM
Last Updated : 29 Mar 2024 08:18 PM

‘அனுமதியின்றி கூட்டம்’ - சவுமியா அன்புமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு

மேட்டூர்: மேட்டூர் அடுத்த மேச்சேரியில் உரிய அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தியதாக பாமக வேட்பாளர், கவுரவ தலைவர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம், மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி நடந்தது. இந்த கூட்டம் அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் நடந்தது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது தொடரபாக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை.

இதுகுறித்த தகவலறிந்த பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் இன்று (29-ம் தேதி) புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜசேகர், அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், எடப்பாடி அடுத்த ஆவணி பேரூர் கீல்முகம் ஊராட்சி ஆலமரத்துகாட்டில் நேற்றிரவு பாஜக சார்பில் சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், பாஜக நகர தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இதுகுறித்த தகவலறிந்த பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படை அதிகாரி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x