Published : 29 Mar 2024 04:05 PM
Last Updated : 29 Mar 2024 04:05 PM

“வேட்புமனுவை கூட சரியாக தாக்கல் செய்ய முடியாத அண்ணாமலையால்...” - செல்வப்பெருந்தகை தாக்கு

செல்வப்பெருந்தகை

சென்னை: “இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் கிரிமினல் வேலை என்பது. இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜனநாயகத்துக்கு உட்பட்ட அரசியல் கட்சிகளை முடக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதனுடைய உச்சபட்சமாக தங்களுடைய (காங்கிரஸ்) கணக்குகளில் உள்ள பணத்தை திருடினால் காங்கிரஸ் பேரியக்கம் நகராது, எந்த மூலைக்கும் செல்ல முடியாது என்ற கணக்குப் போட்டு இந்தச் செயலை செய்து இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அபராதத்தை வைத்திருக்கிறார்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எதற்காக இதை எல்லாம் தேர்தல் நேரத்தில் செய்கிறார்கள் என்று நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பாசிச ஆட்சி என பாஜவினரே நிரூபித்து வருகிறார்கள். இவை முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.

கள்ள பணம், கருப்பு பணம், தீவிரவாத பணம் என எல்லாவற்றையும் தேர்தல் பத்திரம் மூலம் திருடும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் பணத்தை திருடுகிறது. இது எந்த விதத்தில் நியாயம் ஆகும். பாஜக இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கப் போகிறது. எங்கள் தலைவர் சொன்னதைப்போல பாஜகவை மட்டும் வீழ்த்தினால் போதாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் ஒழிக்க வேண்டும்.

இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் மக்களை ஏமாற்றும் கிரிமினல் வேலை என்பது. இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். அண்ணாமலை என்ன படித்திருக்கிறார்? எழுத்தறிவில்லாத, படிப்பறிவு இல்லாத பாமரன் கூட வேட்புமனுவை சரியான முறையில் பதிவு செய்கிறார். இவருக்கு எந்த ஸ்டாம்ப் பேப்பரில் அபிடவிட் (Affidavit) செய்ய வேண்டும் என்பது கூட தெரியாதா? களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், கலவரத்தை ஏற்படுத்தவும் அண்ணாமலை இது மாதிரியான வேலைகளை செய்து இருக்கிறார்.

தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவின் ஊழல் வெளியே வந்துவிட்டது. அதை மறைக்க டெல்லி முதல்வரை கைது செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் திசை திருப்பும் முயற்சி. இந்த நாட்டையே ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள்... ஒரு வேட்புமனுவை கூட சரியான முறையில் உங்களால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு என்ன நீங்கள் நல்லது செய்ய முடியும்? இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

முன்னதாக, கோவை மக்களவைத் தொகுதியில் நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன் விவரம் > நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு - நடந்தது என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x