Published : 29 Mar 2024 03:48 PM
Last Updated : 29 Mar 2024 03:48 PM
கோவை: "தேர்தலில் 60 சதவீதம், 90 சதவீதம், 100 சதவீதம் வாக்கு வாங்குவதாக கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை. ஆனால், வெற்றி எங்களுக்குத்தான்" என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
கோவையில் திமுக எம்.பி. கனிமொழி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "போதைப் பொருட்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிக்கியது. குறிப்பாக குஜராத் துறைமுகத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. அந்த துறைமுகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த போதைப் பொருள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியே வரவில்லை. அது தொடர்பான விசாரணை நடக்கிறதா? இல்லை, அதையும் முடித்துவிட்டனரா என்பதும் தெரியவில்லை" என்றார்.
அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் 60% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பேசியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "60 வாங்கலாம், 90 வாங்கலாம், நூறு சதவீதம்கூட வாங்கலாம். அவ்வாறு கனவு காண்பது அவருடைய உரிமை. ஆனால், வெற்றி நிச்சயமாக திமுகவுக்குத்தான்" என்றார்.
கோவையைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சி நிறைய பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், நான் ஒரு பைசா கூட செலவழிக்கமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, "தேர்தலுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று சொல்லும் அவர்கள், எதற்காக தேர்தல் பத்திரங்களை எல்லாம் வாங்கினார்கள்? எனவே அவர் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம். யாரும் இங்கே காசைக் கொட்டி வாக்கு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக முதல்வரின் திட்டங்களை நம்பித்தான், தமிழகத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், எனவே அவர்கள் வெற்றி பெறுவார்கள்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT