Published : 29 Mar 2024 02:11 PM
Last Updated : 29 Mar 2024 02:11 PM
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் சாத்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இருந்து, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன.
2009 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரையும், 2014 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார்.
3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றார். தற்போது இரண்டாவது முறையாக கனிமொழி தூத்துக்குடியில் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்.சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை இருந்த அதே கூட்டணி பலத்தோடு கனிமொழி களத்தில் இருக்கிறார். ஆனால், எதிர்தரப்பு அதிமுக தலைமையில் ஒரு அணியாகவும், பாஜக தலைமையில் ஒரு அணியாகவும் இரண்டாக பிரிந்து நிற்கின்றன.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில், 4-ல் திமுக, ஒன்றில் காங்கிரஸ் என 5 தொகுதிகள் திமுக கூட்டணி வசமே இருக்கின்றன. கோவில்பட்டி மட்டும் அதிமுக வசம் இருக்கிறது.
2-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு போட்டியிடும் கனிமொழிக்காக, மாநில அமைச்சர்கள் கீதாஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த தேர்தலின்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கென தனியாக தேர்தல் அறிக்கை ஒன்றை கனிமொழி வெளியிட்டார்.
அதில் கூறப்பட்ட பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்தது போன்றவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிமுக சார்பில் களம் காணும் சிவசாமி வேலுமணியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் என்றாலும், அவர் குடியிருப்பது சென்னையில் என்பதால் தொகுதிக்கு பரிச்சயம் இல்லாதவர் என கூறப்படுகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவுக்கு என்று இருக்கும் பலமான ஓட்டு வங்கி மற்றும் திமுக அரசு மீதான அதிருப்தி ஆகியவை தங்களுக்கு வலு சேர்க்கும் என அதிமுகவினர் கூறுகின்றனர்.
பாஜக அணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயசீலன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 42,004 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மற்றும் மத்தியில் நிலையான ஆட்சியை விரும்பும் மக்களின் வாக்குகள் தங்களுக்கு வரும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு என வழக்கமாக இருக்கும் வாக்கு பலம் இம்முறையும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அக்கட்சி வேட்பாளரான பல் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார். வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நான்குமுனைப் போட்டி நிலவினாலும், இரு கழகங்களுக்கு இடையேயான போட்டிதான் தீவிரமாக இருக்கிறது.வேட்பாளர்களின் பிரச்சாரத்தை 14 லட்சத்து 48 ஆயிரத்து 179 வாக்காளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்: தூத்துக்குடி தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நிலவி வருகின்றன. ரயில் சேவையில் தூத்துக்குடி பின்தங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரவேண்டும். தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மேம்பாலம், சுரங்கப்பாதைகள் தேவை.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும். திருச்செந்தூரில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாமிரபரணி பாசன குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கின்றனர்.
வாக்காளர்கள் விகிதாச்சாரம்: தூத்துக்குடி தொகுதியில் இந்துக்கள் 72 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 7 சதவீதம் பேரும் உள்ளனர். சாதிரீதியாக நாடார் சமூகத்தினர் 25 சதவீதம், ஆதிதிராவிடர் வகுப்பினர் 21.5 சதவீதம், தேவர் சமூகத்தினர் 10 சதவீதம், நாயக்கர் சமூகத்தினர் 7 சதவீதம், பிள்ளைமார், பர்னாண்டோ, யாதவர் சமூகத்தினர் தலா 5 சதவீதம், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 3 சதவீதம், அருந்ததியர் 2.5 சதவீதம், ஆசாரி சமூகத்தினர் 2 சதவீதம், இதர பிரிவினர் 14 சதவீதம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT