Published : 29 Mar 2024 01:14 PM
Last Updated : 29 Mar 2024 01:14 PM
திருச்சி: மாற்று அணி வேட்பாளர் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காமல் ஆதங்க கண்ணீர் விடுகிறார். நான் கூட்டணி கட்சியினர் மற்றும் மக்களின் மகத்தான ஆதரவைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறேன் என திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா தெரிவித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள தனியார் திருமண அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜய பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசியது: மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தியில் உள்ள 85 சதவீத மக்களுடன் நாம் கூட்டணி வைத்துள்ளோம். நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்டில் விலை வாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் ஆதரவுடன் நாம் வெற்றி பெறுவது உறுதி என்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: நமது வேட்பாளர் கருப்பையா கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தருவார். புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு நான் கியாரண்டி தருகிறேன். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் வெற்றி அமையும் என்றார்.
வேட்பாளர் கருப்பையா பேசும்போது, ‘‘மாற்று அணி வேட்பாளர், கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காமல் ஆதங்க கண்ணீர் விடுகிறார். நான் கூட்டணி கட்சியினர் மற்றும் மக்களின் மகத்தான ஆதரவு கிடைத்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறேன்’’ என்றார்.
டெல்லிக்கு கூட்டிட்டு போங்க...: கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன் பேசும்போது, ‘‘வேட்பாளர் கருப்பையா வெற்றி பெற்றதும் கட்சி நிர்வாகிகளை டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். புதிய நாடாளுமன்றம், தாஜ் மஹால் ஆகியவற்றை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தால் காசிக்கும் கூட்டிச் செல்ல வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT