Published : 29 Mar 2024 10:23 AM
Last Updated : 29 Mar 2024 10:23 AM
உதகை: தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி உள்ளது. பாஜக ஒரு பொருட்டே அல்ல என உதகையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்து பேசினார். இக்கூட்டத்தில், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை அறிமுகம் செய்து வைத்து பேசிய தாவது:
லோகேஷ் தமிழ்ச் செல்வன் மக்களுக்கான வேட்பாளர். இதுவரை திமுக., கூட்டணியில் 38 எம்.பி.,க் கள் இருந்தனர். ஆனால் தமிழ் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. நாம் அறிவித்த திட்டங்களைத் தான் நடத்தி வருகிறார்கள்.
நமக்கு எதிரி தி.மு.க.தான். அதிமுக, திமுக இடையே தான் போட்டி உள்ளது. பா.ஜ.க.வுக்கு 5 சதவீத வாக்குகள் தான் உள்ளன. அது தற்போது 10 சதவீதமாக அதிகரித்திருக்கலாம். அது ஒரு பொருட்டில்லை. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர்.
எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார். எடப்பாடியார் பொதுச் செயலாளராக ஆன பின்பு நடைபெறுகின்ற முதல் பொது தேர்தல் இந்த தேர்தல். எனவே அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இருந்து பூத் கமிட்டி சிறப்பாக பணியாற்றி ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளுக்கு குறைவில்லாமல் வாங்க வேண்டும்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் தான் உள்ளன. அதிமுகவினர் சிறப்பாக தேர்தல் பணியாற்றி ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் வாக்குகள் என 6 தொகுதிக்கும் சேர்த்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன், மாநில இளைஞரணி இணை செயலாளர் பால நந்தகுமார், நகர செயலாளர் சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT