Published : 29 Mar 2024 09:50 AM
Last Updated : 29 Mar 2024 09:50 AM

கரூர் | பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: குளித்தலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆற்று பாதுகாப்பு உட்கோட்டம் அலுவலகத்தில் விவசாயிகள், பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி நேற்று (வியாழன்) இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை, லாலாபேட்டை, கோட்டமேடு, மருதூர், பணிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இல்லாததால் காய்ந்து சேதம் ஏற்பட்டு வருகிறது.

வாழை, வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகள் வாழ்வாதாரத்தை காத்திட மாயனூர் காவிரி கதவணையிலிருந்துகட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி கடந்த 23ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உதவி செயற்பொறியாளர் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் தற்பொழுது தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது என கூறினார்.

விவசாயிகள் தங்களது விவசாயத்தை பாதுகாக்க உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

உதவி செயற் பொறியாளர் மாயனூர் கதவணையில் இருப்பு உள்ள தண்ணீர் முழுமையாக கடைமடை வரை செல்ல வாய்ப்பு இல்லை. மூன்று நாட்கள் தண்ணீர் தேக்கி வைத்து தண்ணீர் திறந்தால் போதிய தண்ணீர் விவசாயத்திற்கு ஏதுவாக இருக்கும் என கூறினார். குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் மாயனூர் கதவணையில் உள்ள தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் கதவணையில் இருந்த தண்ணீர் திறக்கப்பட்டது. குறைந்த அளவு தண்ணீர் இருந்ததால் கே.பேட்டை வரை தண்ணீர் வந்தது. பின்பு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் வரவில்லை.

இந்நிலையில் நேற்று இரவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து குளித்தலை நீர் வளததுறை உதவி செயற் பொறியாளர் ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடம் உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணன். வட்டாட்சியர் சுரேஷ் .காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 1ஆம் தேதி தண்ணீர் திறக்க திட்ட கருத்துரு உயர் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குடிநீருக்காக மேட்டூரில் இருந்து ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 1500 கன அடியாக திறக்கப்பட உள்ளது. அதன் பேரில் தண்ணீர் திறக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் கூறினார்.

விவசாயிகள் உடனே எங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து காத்திருப்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x