Last Updated : 07 Feb, 2018 08:47 AM

 

Published : 07 Feb 2018 08:47 AM
Last Updated : 07 Feb 2018 08:47 AM

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.2 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதை, லிப்டுகள் அமைக்க திட்டம்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.2.19 கோடி செலவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதைகள், லிப்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எழும்பூர் அரசு அருங்காட்சியகம் நாட்டிலுள்ள 2-வது மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அரியவகை காட்சிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. படிமங்கள், நாணயங்கள், கற்சிலைகள், மானிடவியல் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் வந்து பார்ப்பதற்கு வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, அருங்காட்சியகங்கள் இயக்குநர் கவிதா ராமு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வருகின்றனர். இந் நிலையில், மத்திய அரசின் நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரத்தை மேம்படுத்துதல் துறை சார்பில், அணுகத்தக்க இந்தியா (சுகம்யா பாரத் அபியான்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, பொதுஇடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

அந்த வகையில், எழும்பூர் அருங்காட்சியகத்தை மாற்றுத்திறனாளிகள் வந்து பார்த்து ரசிப்பதற்காக அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

இதன்படி, அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களில் வந்து இறங்குவதற்கான வசதி, அவர்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடப்பதற்காக தொட்டுணரக் கூடிய பாதை வசதி, படிக்கட்டுகளில் ஏறுவதற்கு வசதியாக பேட்டரி யால் இயங்கக் கூடிய இருக்கைகள் அமைக்கப்படும்.

டச் ஸ்கிரீன் மூலம்...

அத்துடன், பார்வையற்றவர்கள் லிப்டுகளில் செல்வதற்கு வசதியாக பிரெய்லி வசதி, ஆடியோ வசதி, கண்ணாடிகள் மற்றும் கைப்பிடிகள் அமைக்கப்படும். மேலும், ஒலிபெருக்கி மூலம் வழிகாட்டுதல் மற்றும் பிரெய்லி பட்டன்களை கொண்ட டச் ஸ்கிரீன் மூலம் தகவல்களைத் தெரிவிக்கும் பேசும் இயந்திரங்கள், அருங்காட்சியக திரையரங்கம், காட்சிக் கூடங்களுக்கு செல்ல பிரத்யேக நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

ரூ.2.19 கோடி செலவில்...

ரூ.2.19 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இப்பணி கள் அனைத்தும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலக பரிந்துரையின் பேரில், பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்துக்கான அறிக்கையை சாமர்த்தியம் என்ற என்ஜிஓ அமைப்பு தயாரித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவ டையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x