Published : 28 Mar 2024 09:26 PM
Last Updated : 28 Mar 2024 09:26 PM

யுஎஸ் Vs இந்தியா கருத்து மோதல் முதல் நிர்மலா சீதாராமன் சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 28, 2024 

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.

இதனிடையே, 2024-25 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, எதிர்க்கட்சி அறிவித்துள்ள தொழிலாளர் நீதி உத்தரவாதமான ரூ.400-ஐ விட குறைவாக இருப்பதாக பாஜக மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தல் - வேட்புமனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடைபெற்றது.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு, ஓபிஎஸ் பெயரில் சுயேச்சையாக போட்டியிடும் 4 வேட்பாளர்கள் மற்றும் எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டது. சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்கப்பட்டன.

“அண்ணாமலைக்கு அருகதை இல்லை” - கனிமொழி: “அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர். 20 ஆயிரம் புத்தகம் படித்ததாக கூறுகிறார். ஒரு மனிதன் ஐந்து வயதில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படித்தால் தான் அது சாத்தியம். சங்க காலத்தில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வல்வில் ஓரி அரசரை சுதந்திரப் போராட்ட வீரர் என அண்ணாமலை கூறுகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

காங். வங்கிக் கணக்கு முடக்கம் - அமெரிக்கா கருத்து: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. இந்தநிலையில், காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்தும் கருத்து தெரிவித்து இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

“காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்சி தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்வது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான, வெளிப்படையான, காலதாமதமின்றி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்: அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்த நிலையில், எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, "நமது தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான இத்தகைய வெளிப்புற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்தியாவில், சட்ட நடைமுறைகள் சட்டத்தின் ஆட்சியின்படி நடக்கின்றன. பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் சர்வதேச உறவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. அரசுகள் மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள் விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மனு - அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா? - கேஜ்ரிவால் ஆவேசம்: “பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா?” என்று மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறையின் காவல் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், அவர் இன்று மதியம் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். தனது பேச்சின்போது அவர், “ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளியாக சொல்லவில்லை. மேலும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் கொஞ்சம் கூட மீட்கவில்லை. உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே?

சிபிஐ 31,000 பக்கங்கள், அமலாக்கத் துறை 21,000 பக்கங்கள் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என் பெயர் நான்கு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இப்படி ஓர் அறிக்கை போதுமா?" என்றார்.

இந்த வழக்கில் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600+ வழக்கறிஞர்கள் கடிதம்: நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்-டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில் குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கிறது. இதுபோன்ற அழுத்தங்கள் நீதிமன்றத்தை பாதிக்கக்கூடியவை; ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை.

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களை தள்ளுகிறார்கள். எனவே, அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காப்பது மிகவும் முக்கியம். அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு இயல்பாக அதிக சக்தியை அளிக்கும். இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு போதுமான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது” கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள திமுக, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்பமான காரணங்களைக் கூறி தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார். தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை. மக்களிடம் இருந்து சம்பாதித்துள்ள அதிருப்தியை நிர்மலா சீதாராமன் உணர்ந்திருக்கலாம்.

மக்களின் பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்த விதம் நிச்சயமாக அவருக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனை நிர்மலா சீதாராமனும் உணர்ந்திருக்கலாம் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் பணம் பறித்துள்ளது. பாஜகவிடம் ரூ.6,000 கோடி உள்ளது. பாஜக அமைச்சரவையில் நிர்மலா முதன்மை அமைச்சர். அப்படியெனில் பாஜகவால் ஏன் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது?” என்று திமுக விமர்சித்துள்ளது.

ரூ.50,000-ஐ தொட்ட தங்கம் விலை: சமீப நாட்களில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை வியாழக்கிழமை 50 ஆயிரத்தைத் தொட்டது. சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையானது.

சர்வதேச பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“ஊழலற்ற நாட்டை உருவாக்க பாஜக விரும்புகிறது” : "ஊழலற்ற நாடாக இந்தியாவை உருவாக்க பாஜக விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஊழலில் ஈடுபடுபவர்களாகவும், அதனை பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்களோ அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள்" என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவு: ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 77.

கணேசமூர்த்தி எம்.பி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர். பின்னர் அண்ணன் வைகோ உடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தள கர்த்தராக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொண்ணா துயரத்தை தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொது வாழ்க்கையை நடத்தியவர் என்று மறைந்த கணேசமூர்த்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

அதேவேளையில், “எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார்” என்று வைகோ கண்ணீர் மல்க உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x