Published : 28 Mar 2024 08:08 PM
Last Updated : 28 Mar 2024 08:08 PM

“ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு இருந்தால்...” - இபிஎஸ் ஆதங்கப் பேச்சு @ சிவகாசி

சிவகாசி: “தமிழக ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டிருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும்” என சிவகாசியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதங்கத்துடன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில், “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் விஜய பிரபாகரன் உள்ளார். நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. கருணாநிதி வீட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். நமது தலைவர்களுக்கு வாரிசு கிடையாது, தமிழ்நாட்டு மக்கள் தான் அவர்களது பிள்ளைகள்.

அதிமுக கூட்டணியை நேசிக்கக்கூடிய கட்சி. அதிமுக வேட்பாளரை விட கூட்டணி வேட்பாளருக்கு கூடுதலாக உழைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை கண்ணீர் விட வைக்கிறார்கள். ஸ்டாலினும் உதயநிதியும் என்னைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். அவர்களுக்கு தூக்கம் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புயல், வெள்ளம் என எது வந்தாலும் மக்கள் சேவையில் முதன்மையில் இருக்கும்.

சிவகாசி என்றாலே பட்டாசுதான். நான் முதல்வராக இருந்த போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு தொழிலாளர்களை அழைத்து வந்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என என்னிடம் மனு அளித்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. எம்பிக்கள் மூலம் மத்திய அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தோம். 2026-ல் அதிமுக ஆட்சி அமையும் போது பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திமுக ஆட்சியில் பட்டாசு தொழிலை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

திமுக கூட்டணியைச் சேர்ந்த 38 எம்பிக்கள் இருந்தும் பட்டாசு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பட்டாசு தொழிலுக்கான தடைகள், இடர்பாடுகளை நீக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். பட்டாசு தொழில் நசிந்துள்ள நிலையில் முதல்வர் நீங்கள் நலமா என்று கேட்கிறார். திமுக ஆட்சியில் இருக்கும் வரை யாரும் நலமாக இருக்க முடியாது.

அதிமுக அரசு மீது ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டு புகார் கூறியவர் ஸ்டாலின். இவர்கள் தப்பு செய்வதை தட்டி கேட்டால் ஆளுநர் மோசமானவர். திமுக அரசின் ஊழல்களை துறைகள் வாரியாக பட்டியலிட்டு ஆதாரங்களுடன் ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம். முதல்வரின் மருமகனும் மகனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசி உள்ளார். அந்தப் புகார் மனுவை ஆளுநர் விசாரித்து இருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும். ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் சொத்து வரி வீடுகளுக்கு 100 சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதமும் மின்சார கட்டணம் 52 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு வரிகளை உயர்த்திவிட்டு வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம் என்கிறார்கள். மத்திய அரசு கச்சா எண்ணையை குறைந்த விலையில் இறக்குமதி செய்த நிலையில், வரிகளை உயர்த்தி உள்ளதால் பெட்ரோல் விலை குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் 70 சதவீதத்திற்கும் மேல் வாரியாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் சேர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.

போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். போதைப் பொருள்களை கடத்துவதற்காகவே திமுகவில் அயலக அணி என்ற அமைப்பு அமைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் என்னை முதுகெலும்பு இல்லாதவர் என்கிறார். வெயிலிலும் மழையிலும் இருந்து விவசாயம் செய்த உடம்பு இது. எனக்கு முதுகெலும்பு வலுவாக உள்ளது. விமர்சனம் செய்வதற்கும் ஒரு வரையறை உள்ளது. எவ்வளவோ சோதனைகளை கடந்த இயக்கம் அதிமுக. எந்த பிரச்சினைகளையும் சந்திக்க நாங்கள் தயார். நல்ல நிர்வாகம் செய்வதற்காகத்தான் ஆட்சி அதிகாரம், எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்கு அல்ல. ரூ.4800 கோடி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என்மீது பொய் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டேன்.

அதை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.230 கோடி டெண்டர் விட்டு, ரூ.410 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது குறித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆதாரம் இல்லை என்று பின்வாங்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வழக்குகளை நீதிமன்றத்தில் நேர்மையாக எதிர்கொண்டு நிரபராதி என நிரூபியுங்கள். ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள பலர் ஊழல் வழக்குகளில் விரைவில் சிறை சென்று விடுவர்” என்றார்.

வேட்பாளர் விஜய பிரபாகரன்பேசுகையில், “ஒரு இளைஞனாக விருதுநகர் தொகுதியில் நிற்கிறேன். ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம். விஜயகாந்தின் சொந்த மண்ணான விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த பந்தம் என்றுமே விட்டுப் போகாது. எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என்ற உறவு இன்றும் தொடர்கிறது” என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏக்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, அகில இந்திய பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x