Published : 28 Mar 2024 07:46 PM
Last Updated : 28 Mar 2024 07:46 PM
கோவை: கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அண்ணாமலை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறும் போது, "தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி வேட்பாளர் தாக்கல் செய்யும் பிராமண பத்திரத்தில் (26) நீதிமன்றம் கட்டணம் அல்லாத முத்திரைதாளில் போட வேண்டும். அண்ணாமலை நீதிமன்ற கட்டணத்தில் உள்ள முத்திரைதாளில் போட்டுள்ளார். காலை முதல் இதை சுட்டிக்காட்டி வேட்பு மனு பரிசீலனையை நிறுத்தி வைக்க மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தினோம்.
புதன்கிழமை இரவு வரை இந்த பிராமண பத்திரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விதிமுறைகளை எத்தனையோ சுயேச்சை வேட்பாளர்கள் கூட சரியாக பின்பற்றுகின்றனர். இத்தகைய குளறுபடியை எடுத்துக்கூறிய அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தும் வேட்பு மனு நேரடியாக தள்ளுபடி செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் அணையத்தில் புகார் செய்யப்படும்" என்றார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, "பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். ஒன்று நிராகரிக்கப்பட்டது. மற்றொன்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி சரியாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார்.
முன்னதாக, அண்ணாமலை வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT