Published : 28 Mar 2024 08:32 PM
Last Updated : 28 Mar 2024 08:32 PM
“நாங்கள் எதிர்க்கும் அளவுக்கு பாஜகவுக்கு தகுதியில்லை. அதிமுகவுடன்தான் எங்கள் போட்டி” என வெளிப்படையாகப் பேசினார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. பாஜகவையும் கோவை வேட்பாளர் அண்ணாமலையையும் தாக்கிப் பேசும் கோவை அதிமுக வேட்பாளர், திமுக மீதோ அல்லது திமுக வேட்பாளர் குறித்தோ விமர்சிப்பதில்லை. கோவையில் உண்மையில் கட்சிகளிடையான போட்டி எப்படி இருக்கிறது?
கோவை தொகுதியில் திமுக சார்பாக கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அண்ணாமலை களத்தில் உள்ளனர். பாஜக இரு திராவிட கட்சிகள் மீதும் விமர்சனத்தை முன்வைக்கிறது. ஆனால், திமுகவோ பாஜகவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் இருக்கிறது. குறிப்பாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, ‘‘எங்களுடைய எதிரி அதிமுகதான்” என திட்டவட்டமாகக் கூறினார். அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனோ அண்ணாமலையை சீண்டி வருகிறார். அண்ணாமலையைத்தான் விவாதத்துக்கும் அழைத்தார்.
பாஜக vs அதிமுக! - நேரடியாக பாஜக - அதிமுக மோதிக்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? பாஜக தன்னை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகக் கூறி வருகிறது. உண்மையில் அந்த இடத்தைப் பிடிக்க அதிமுகவை பல விதங்களில் பாஜக சீண்டியும் வருகிறது. குறிப்பாக, நிர்வாகிகள் இழுப்பது போன்ற உள்ளடி வேலைகளையும் செய்து வருகிறது. எனவே, அதிமுகவின் இடத்தைப் பிடிக்க பாஜக காய்களை நகர்த்தி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதை உணர்ந்த அதிமுக, பாஜகவுக்கு எதிராக இயங்கத் தொடங்கியுள்ளது. அது கோவையில் வெளிப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, பல தொகுதிகளிலும் இதுதான் நிகழ்கிறது. ஆனால், கோவையில் பாஜகவின் மாநில தலைவர் களத்தில் இருப்பதால் அதிமுக வலுவாக எதிர்த்து வருகிறது.
திமுக நிலைப்பாடு என்ன? - மாநில கட்சிகள் கூட்டணியே அமைத்தாலும் தேசிய கட்சிகளை வளரவிடாது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் ஆட்சி புரிந்து வருகின்றன. குறிப்பாக, வலிமையான காங்கிரஸை ஆட்சியிலிருந்து இறக்கி அந்த இடத்தைப் பிடித்தது திமுக. எனவே, அவ்வளவு எளிதாக அதை விட்டுக் கொடுக்காது திமுக. அதனால், பாஜகவை விமர்சித்து வளர்க்க வேண்டாம் என திமுக எண்ணலாம். அதனால், மற்றொரு திராவிட கட்சியான அதிமுகதான் எங்களின் எதிரி என கூறுவதோடு, கோவையில் பாஜகவை விமர்சிக்காமல் ஓரங்கட்டியும் வருகிறது திமுக.
இந்த அணுகுமுறைகள் உணர்த்தும் செய்தி என்ன? - கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆகவே, இம்முறை திமுக அதே வலிமையுடன் இருப்பதாகவே கருத்துகளும் கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றனர். எனவே, அதிமுக - பாஜக சண்டை என்பது, திமுகவின் முதல் இடத்தை உறுதி செய்வதுடன், இரண்டாம் இடத்துக்கான போட்டியாக உள்ளது என விமர்சகர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்வியைத்தான் அதிமுக சந்தித்து வருகிறது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது அதிமுக. எனவே, இந்தத் தேர்தலில் தங்களின் வாக்கு வங்கியை உயர்த்தி 2026-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி அல்லது பிரதான எதிர்க்கட்சியா இருக்க போராடி வருகிறது. அதற்கு பாஜக தடையாக இருக்கக் கூடாது என அதிமுக கருதுகிறது.
தவிர, கோவை என்பது அதிமுகவின் முக்கியமான கோட்டை. அதில் தங்களின் வெற்றியை உறுதி செய்தே ஆகவேண்டும். இல்லயென்றால் பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய கோட்டை கைநழுவிவிடும். எனவே, இந்தக் காரணத்துக்காகப் பாஜகவை தீவிரமாக விமர்சிக்கிறது அதிமுக. ஆனால், அதிமுகவின் எண்ணமும் அதிமுக - திமுக என களம் இருக்க வேண்டும் என்பதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அது நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல், இந்த முதல் மூன்று இடங்கள் கணக்கும் தற்போதைய நிலவரம்தான். வாக்குப்பதிவுக்கு முன்பு இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT