Published : 28 Mar 2024 06:58 PM
Last Updated : 28 Mar 2024 06:58 PM
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தனி நபர்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் சென்றால், அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதைப் பறிமுதல் செய்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இதில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் பக்கவாட்டு சேதாரம் போல் சாமானியர்கள், வியாபாரிகள் அன்றாடம் பாதிக்கப்படுவதாக ஆங்காங்கே குமுறல்கள் எழுகின்றன.
வியாபாரிகளிடம் பணம், பொருளை பறிமுதல் செய்வது உரிய ஆவணங்களைக் காட்டிய பின்னரும் கூட அவற்றை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவது போன்றவை நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பணம், பொருட்களை எப்போது பறிமுதல் செய்யலாம், பறிமுதல் செய்யப்பட்ட பொருள் / பணத்தை என்ன செய்யும்? எப்படி திரும்பப் பெறலாம்? - இதற்கான வழிகாட்டுதல் குறித்த தொகுப்பு இது.
பணம் அல்லது பொருட்கள் கொண்டு செல்ல விதிமுறைகள் என்ன? - தேர்தல் ஆணையமானது இந்த மக்களவைத் தேர்தலில் பெரிய தொகுதியின் வேட்பாளர்கள் ரூ.95 லட்சத்துக்கும், சிறு தொகுதிகளின் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரையிலும் செலவிடலாம் எனக் கூறியுள்ளது. தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினருக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் ரூ.10 லட்சம் பணம் அல்லது 1 கிலோவுக்கு அதிகமான தங்கம் எடுத்துச் செல்ல முற்பட்டால், உடனடியாக அங்கு உள்ள சிஐஎஸ்எஃப் அல்லது காவல் அதிகாரிகள் வருமான வரித் துறைக்கு தகவல் கொடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பின்னர் வருமான வரித் துறையானது தேவையான சோதனைகள் மேற்கொண்டு உரிய விளக்கங்களைப் பெறும்.
ஒருவேளை பணம், நகை தொடர்பாக உரிய விளக்கம், ஆவணங்கள் கிடைக்கப்பெறாவிட்டால் தேவையான நடவடிக்கையை எடுக்கும். அதாவது அவர்கள் அந்தப் பணத்தையோ, நகையையோ பறிமுதல் செய்யலாம். அந்தப் பணமும், நகையும் எந்த ஓர் அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சொந்தமானது அல்ல என்பதை உறுதி செய்யும் வரை அவை திருப்பியளிக்கப்படாது.
சோதனைச் சாவடிகளில் பறக்கும் படையினர் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் இருந்து அது எந்த ஒரு குற்றச் செயலோடு தொடர்புடையதோ அல்லது அரசியல் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ சொந்தமானதோ என்ற சந்தேகம் எழாத நிலையில், அதனைக் கைப்பற்றத் தேவையில்லை. மாறாக, அவர்கள் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும். அவர்கள் வருமான வரிச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால், அதேவேளையில் ஒரு அரசியல் கட்சிக்காரர் வாகனத்தில் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மது, போதைப் பொருட்கள், ரூ10 ஆயிரத்துக்கும் மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யும்போது குற்றப் பின்னணி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால் கிரிமினல் குற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் 24 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
மாநில எல்லைகளில் மதுபானங்கள் கொண்டு செல்வதைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்தின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கொள்கையின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில மாநிலங்களில் 2 சீலிடப்பட்ட மது குப்பிகளை ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பணமோ, பொருளோ ஒரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ சொந்தமானது இல்லை என்ற பரிசோதனை முடியும் வரை மட்டுமே அவற்றை பறிமுதல் செய்து வைக்க முடியும். அதனை உறுதிப்படுத்திவிட்டால் உரியவர் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
பறிமுதலுக்குப் பின்னர் என்ன நடக்கும்? - ஒருவேளை பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை வேட்பாளருக்கு சொந்தமானது அல்ல, குற்றச் செயலில் தொடர்புடையது அல்ல என்பன தெரியவந்தால் அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட நபரிடமே ஒப்படைத்துவிடலாம். இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி வங்கியில் செலுத்திவிட வேண்டும்.
சாமானியர்கள், வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் ரூ.50,000-க்கு அதிகமான பணம் மாவட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். இந்தப் பணத்தை ஒருவாரத்துக்குள் மீண்டும் திரும்பப் பெற்று கொள்ளலாம். அதற்கு உரிய ஆவணங்களைக் கருவூலத்தில் கொடுத்து நிரூப்பித்தாலே போதுமானது. ஒருவேளை ரூ.50,000-க்கு அதிகமான பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் அந்தப் பணம் கருவூலத்தில் தனியே சீல் வைத்து வைக்கப்படும். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தப்படும்.
பறிமுதல் செய்யப்படும் தொகை ரூ.10 லட்சத்துக்கும் மேலான தொகை என்றால், அதுபற்றி வருமான வரித் துறைக்கு தகவல் தந்துவிட்டால் அவர்கள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சில மாநிலங்களில் ரூ.5 லட்சத்தும் மேற்பட்ட தொகைக்கே வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்படுகிறது.
பணமோ, பொருளோ தேர்தல் முடியும்வரை ஆவணங்களை வைத்துக் கொள்வது தேவையற்ற சிக்கல்களில் இருந்து நம்மை தற்காப்பதாக இருக்கும்.
குறைதீர் குழு: இவை தவிர மாவட்ட அளவிலான குறைதீர் குழுக்கள் உருவாக்கப்பட்டு பணம், பொருள் பறிமுதல் தொடர்பான குறைகளைக் கேட்டு நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்கள், நியாயமான காரணங்களுக்காக பணம் எடுத்துச் செல்வோர் பாதிக்கப்படாத வகையில் இந்தக் குழு இயங்கும். இக்குழுவில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் முதன்மை அலுவலர், மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோர் இருப்பர். அவர்கள் பணம் / பொருள் பறிமுதல் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரிக்கலாம்.
அதாவது, பறிமுதல் தொடர்பாக வழக்கோ, புகாரோ பதிவு பெறாத பட்சத்தில் அவர்கள் தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிமுதலுக்கு அரசியல், தேர்தல் தொடர்பு இருக்கிறதா இல்லையா என ஆராயலாம்.அதன்படி தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு உடனடியாக அந்தப் பணத்தையோ / பொருளையோ உரிய நபர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம்.
தேர்தல் புகார்களுக்கு சிவிஜில்: இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை அளிக்க உருவாக்கப்பட்ட C-Vigil என்னும் செல்போன் செயலி மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகத் தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவிக்கின்றது. தேர்தலில் பணப்பட்டுவாடா போன்ற புகார்களை இந்தச் செயலில் மூலமாக தெரிவிக்கலாம்,
இவை தவிர, பொதுமக்களின் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உருவாக்கப்பட்ட மாவட்ட தகவல் மையத்தில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் நமக்கு எழும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT