Published : 28 Mar 2024 04:02 PM
Last Updated : 28 Mar 2024 04:02 PM
புதுக்கோட்டை: இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசியது: “பணமதிப்பு இழப்பு காரணமாக நாட்டில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் பாஜக அரசு எடுக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியவில்லை என்கிறார்கள். அதை ஒழிக்க முடியாவிட்டால் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்?.
இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவர உள்ளது. அதில், மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கட்சிக்கோ, நபர்களுக்கோ அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் இருக்க வேண்டுமா, இருக்கக் கூடாதா என்பதற்கான தேர்தல்” என்று அவர் பேசினார்.
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, “ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள், இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டத்தின் முடிவுகளாக இருக்கும். மாநிலத்தின் முதல்வர் எப்படி தேர்தல் வாக்குறுதிகளைத் தருகிறார் எனக் கேட்கிறார்கள். இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமாக திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். எனவே, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக தலைவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.
முன்னதாக, திருமயத்தில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, “பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அமலாக்கத் துறை வராது, வருமான வரித் துறை வராது. ஆனால், விரோதமாக இருந்தால் அனைத்தும் வரும், கூடவே, சிறையிலும் தள்ளுவார்கள். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும்.
ஆனால், பாஜகவுக்கு எதிரான அணியில் இருந்தால் கேட்கும் சின்னங்கள் கிடைக்காது. என்னை பொறுத்தவரை இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவானவர்களுக்கு ஒரு சட்டமும், விரோதமானவர்களுக்கு ஒரு சட்டமும் உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தலில் பாஜக அணியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT