Published : 28 Mar 2024 02:30 PM
Last Updated : 28 Mar 2024 02:30 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முக்கியக் கட்சிகளின் தரப்பில் தாக்கலான 3 மாற்று வேட்பாளர்கள், 4 சுயேட்சைகள் உட்பட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 34 வேட்பாளர்கள் 45 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோந்துங்கன் தலைமையில் அதிகாரிகள் மனுக்களை பரிசீலனை செய்தனர். இதில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் நேரடியாக பங்கேற்றனர். மற்ற கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள், சுயேச்சைகள் பங்கேற்றனர். வேட்புமனுக்கள் தனித் தனியாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறுகையில், “புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை உட்பட 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்தனர். இவ்வேட்பு மனுக்கள் பரிசீலனை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. 34 வேட்பாளர்கள் சமர்பித்த 45 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளர்கள் சமர்பித்த 36 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
7 வேட்பாளர்களின் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வரும் 30-ம் தேதி திரும்பப் பெறலாம். அன்று வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்." என்று தெரிவித்தனர்.
யார் மனுக்கள் நிராகரிப்பு: மனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பாஜக, காங்கிரஸ், அதிமுக ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டதையடுத்து அவர்களின் மாற்று வேட்பாளர்கள் 3 பேர், சுயேச்சைகள் 4 பேர் என 7 பேர் தாக்கல் செய்த 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT