Published : 28 Mar 2024 01:10 PM
Last Updated : 28 Mar 2024 01:10 PM
திருநெல்வேலி: “எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி வேட்புமனு தாக்கல் செய்தேன்” என்று கூறிய திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி ராமசுப்பு தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கூட்டணி என்று வரும்போது பலர் போட்டி போட வருகிறார்கள். தனியாக நிற்கும்போது யாரும் வரவில்லை. காங்கிரஸ் தனியாக நிற்கும்போது நான் தேர்தலில் வெற்றிபெற்றேன். தற்போது பத்து ஆண்டுகளாக எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை.
இத்தொகுதியில் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வேட்பாளராக நான் இருக்கிறேன். என்னை போட்டியிட எதிர்பார்க்கிறார்கள் மக்கள். தோழமைக் கட்சிகள் கூட, கூட்டணி கட்சிகள் கூட நான் தான் வேடபாளர் என்று சொல்கிறார்கள். நெல்லை மக்களவைத் தொகுதி மக்கள் அனைவரும், திமுக உட்பட கூட்டணி கட்சிகளும் நான் தான் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பி.சி. வேணுகோபால் எனக்கு தான் சீட்டு தர வேண்டும் என்பதை உறுதியாக கூறினார். டெல்லி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைமையகத்திலும் எனக்குத்தான் சீட் என்று முதலில் தெரிவித்தார்கள். வேட்பாளர் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னால் பகல் ஒரு மணி வரை டெல்லியில் ராமசுப்பு தான் வேட்பாளர் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இரண்டு மணிக்கு டெல்லியில் இருந்து எனது நண்பர்கள் போனில் அழைத்து நீங்கள் வேட்பாளர் இல்லை ராபர்ட் புரூஸ்தான் வேட்பாளர்கள் என்று தெரிவித்தார்கள். என்னை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்காததே தவறு.
எனினும், எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்.வேட்பு மனுவை தாக்கல் செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் அகில இந்திய காங்கிரஸிலிருந்தும் தமிழ்நாடு காங்கிரஸிலிருந்தும் என்னிடம் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து எனது மனுவினை தற்போது வாபஸ் வாங்கியுள்ளேன்.” என்று முன்னாள் எம்பி ராமசுப்பு தெரிவித்தார்.
பின்னணி: மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப.கார்த்திகேயனிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையொட்டி, திமுக கூட்டணி கட்சியினர் அவருடன் ஊர்வலமாக வந்திருந்தனர்.
இந்நிலையில், அவருக்கு போட்டியாக திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களில் இவரும் ஒருவர். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த ராமசுப்புவிடம், ‘சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வந்துள்ளீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் காங்கிரஸ்காரன்” என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT