Published : 28 Mar 2024 12:11 PM
Last Updated : 28 Mar 2024 12:11 PM
தென்காசி: தென்காசி (தனி) மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல் கிஷோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, “தென்காசி தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எல்லா வளங்களும் இருந்தும் தென்காசி தொகுதி முன்னேற்றம் அடையாமல் உள்ளது. தென்காசி தொகுதியில் வெற்றிபெற்று, இத்தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி தென் தமிழக மக்களுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதுதான் எனது லட்சியம்.
இந்த முறை தென்காசி தொகுதி மக்கள் வெற்றி வாய்ப்பை தருவார்கள் என கருதுகிறேன். தேர்தல் ஆணையத்திடம் 2 மாதத்துக்கு முன்பே தனிச் சின்னம் கேட்டேன்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு தனிச் சின்னம் ஒதுக்கவில்லை. புதிய சின்னத்தை குறைந்த நாளில் மக்களிடம் சேர்ப்பது கடினமாகிவிடும். அதனால் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
இரட்டை இலை சின்னம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அறிமுகமான சின்னம். எம்ஜிஆரின் வெற்றிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். எனது பெயரில் எத்தனை பேர் போட்டி யிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சொத்து மதிப்பு: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன்னிடம் ரூ.1.21 லட்சம், மனைவியிடம் ரூ.1.02 லட்சம் கையிருப்பு உள்ளதாகவும், தன்னிடம் ரூ.18.12 லட்சம், மனைவியிடம் ரூ.47.04 லட்சம் அசையும் சொத்துகளும், தன்னிடம் ரூ.12.99 கோடி மதிப்பிலும், மனைவியிடம் ரூ.12.09 கோடி மதிப்பிலும் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி பெயரில் ரூ.3.77 கோடி கடன் நிலுவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT