Published : 28 Mar 2024 09:55 AM
Last Updated : 28 Mar 2024 09:55 AM

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவு - இன்று பரிசீலனை

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில், பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ சின்ராஜ். | படம்: ஜெ.மனோகரன் |

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் அட்ட வணைப்படி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.

அதன்படி வரும் ஏப்.19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் மார்ச் 21-ல் 9, 22-ம் தேதி 47 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

அரியலூர் ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்த
சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்.
உடன், அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர்.

மார்ச் 23, 24 ஆகிய 2 தினங்களும் விடுமுறை. தொடர்ந்து திங்கள்கிழமை மார்ச் 25-ம்தேதி 402 பேரும், 26-ம் தேதி 301 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதற்காக 2 மணிக்கே இறுதியாக வேட்பு மனுவுடன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தேனியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர்
டிடிவி. தினகரன், ஆட்சியர் ஆர்.வி. சஜீவனாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
​​​​​​அருகில் ரவீந்திரநாத் எம்பி. படம்: நா. தங்கரத்தினம்

தமிழகம் முழுவதும் மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிக பட்சமாக கரூரில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதியில் 18 பேர் 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்காசி (தனி) தொகுதி தேர்தல்
அலுவலர் ஏ.கே.கமல்கிஷோரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உடன் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ராஜலெட்சுமி உள்ளிட்டோர்.

தொடர்ந்து இன்று காலை 11 மணி முதல் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 30-ம் தேதிவரை வேட்பு மனுக்களை திரும்ப பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x