Published : 28 Mar 2024 10:57 AM
Last Updated : 28 Mar 2024 10:57 AM

இரு கழகங்களோடு சரிக்கு சமமாக பாமக - ‘ஸ்டார் தொகுதி’ தருமபுரி களம் எப்படி?

சவுமியா அன்புமணி, ஆ.மணி, ஆர்.அசோகன்

பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளும், பாமக மாநில தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா போட்டியிடுவதால் தருமபுரி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். எனவே, இந்த தருமபுரி தொகுதி நட்சத்திர தொகுதியாக அடையாளம் பெற்றுள்ளது.

இங்கு, திமுக வேட்பாளராக ஆ.மணி, அதிமுக வேட்பாளராக ஆர்.அசோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றவர். அதிமுக வேட்பாளர் முற்றிலும் புதியவர்.

கடந்த 22-ம் தேதி பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் இடம்பெற்றிருந்தார். தனது ஆதரவாளர்களுடன் தைலாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசாங்கத்தின் கார் தைலாபுரம் தோட்டத்தை அடையும்போது ‘தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார்’ என்ற அறிவிப்பும், புதிய வேட்பாளராக சவுமியா அன்புமணி பெயரும் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்புவரை, தருமபுரி தொகுதியில் திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவும் என பேசிவந்த அரசியல் நோக்கர்கள் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். பாமக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர். எனவே, கட்சியின் மொத்த பலமும் தொகுதியில் வெளிப்படும் என்பதால் சூடு குறையாத தேர்தல் களமாக தருமபுரி தொகுதி நிலவும் என பேசத் தொடங்கினர்.

இதற்கிடையில், எந்த காரணத்துக்காகவும் தருமபுரி தொகுதியை இழந்து விடக்கூடாது என முனைப்பு காட்டிவரும் தருமபுரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக நிர்வாகிகளையும், கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் ஓய்வின்றி தொகுதிக்குள் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் 5 தொகுதிகளில் 3-ல் அதிமுக-வும், 2-ல் அன்றைய கூட்டணி கட்சியான பாமக-வும் வெற்றி பெற்றன. அதன்மூலம் தருமபுரி மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என்ற தோற்றத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ இந்த முறையும் அந்த பெருமையை நிலைநிறுத்திக் கொள்ள இரவு, பகல் பாராமல் தொகுதி முழுக்க பணியாற்றி வருகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலை, (மநீம நீங்கலாக) இன்றுள்ள இதே கூட்டணியுடன் எதிர்கொண்ட திமுக வேட்பாளர் டி.என்.வி.செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகளை பெற்று வென்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

அந்த தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டு 53 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 19 ஆயிரம் வாக்குகளையும், மநீம 15 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2014 மக்களவைத் தேர்தலை திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில், பாஜக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதிமுக வேட்பாளர் மோகனை இரண்டாம் இடத்துக்கும், திமுக வேட்பாளர் தாமரைச்செல்வனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதற்கு முந்தைய 2009 மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் மருத்துவர் செந்திலை இரண்டாம் இடத்துக்கும், தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி திமுக வேட்பாளர் தாமரைச் செல்வன் 3 லட்சத்து 65 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தமிழக மக்களவை தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (1 லட்சத்து 35 ஆயிரத்து 942) வென்ற வேட்பாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இவ்வாறு, ஒரே கட்சி தொடர்ந்து வெற்றியை நிலைநாட்டாத தருமபுரி மக்களவைத் தொகுதியில், இன்றைய நிலவரப்படி நிறைய நீர்ப்பாசன திட்டங்கள் கோரிக்கை வடிவிலேயே உள்ளன. சொந்த நிலம் இருந்தும் நீர் வளம் இல்லாததால் வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் வேளாண் சமூகங்களை, சொந்த ஊரில் நிரந்தரமாக குடியமர்த்த இந்தத் திட்டங்கள் பேருதவியாக அமையும்.

அதேபோல, இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான சிப்காட் தொழிற்பேட்டை திட்டமும், முதல் செங்கலை எடுத்து வைத்த நிலையிலேயே தேக்கமடைந்திருக்கிறது. இவைதவிர, வேளாண்மை, சுற்றுலா, கட்டமைப்பு, அடிப்படை வசதி உள்ளிட்டவை தொடர்பான பல கோரிக்கைகளும் காத்திருப்பில் உள்ளன. வாக்காளர்கள் மனம் கவரும் வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 3 பிரதான கட்சி வேட்பாளர்களுமே வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் இங்கும் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. தருமபுரி தொகுதியில் தனித்த வாக்குவங்கி பலம் மிக்க பாமக, இரு கழகங்களோடு சரிக்கு சமமாக களத்தில் நிற்கிறது. வேட்பாளர்களின் பிரச்சாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் யாருக்கு வாய்ப்பளிக்கப் போகிறார்கள். ஜூன் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x