Published : 28 Mar 2024 06:29 AM
Last Updated : 28 Mar 2024 06:29 AM
ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக பதவி வகித்து வந்தவர் அ.கணேசமூர்த்தி (77). ஈரோடு பெரியார் நகரில் வசித்து வரும் இவருக்கு, கபிலன் என்ற மகனும், தமிழ்பிரியா என்ற மகளும் உள்ளனர். மனைவி பாலாமணி காலமாகி விட்டார்.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில், கடந்த 24-ம் தேதியன்று காலை கணேசமூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் கபிலன், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தனர். சுய நினைவு இல்லாமல் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.
அவரது உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணேசமூர்த்தியின் சொந்த ஊரான, சென்னிமலையை அடுத்த குமாரவலசு கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என ஈரோடு போலீஸார் தெரிவித்தனர்.
மன அழுத்ததால் தற்கொலை: மக்களவைத் தேர்தலில், தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் கணேசமூர்த்தி இருந்தார். திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் கட்சி எடுத்த முடிவுகள் குறித்து, அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. கட்சிக்காக பொடா சிறைவாசம் உள்ளிட்ட தியாகங்களைச் செய்திருந்தும், தனக்கு கட்சித்தலைமை உரிய மரியாதை வழங்கவிலலை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.
இந்த மன அழுத்தம் காரணமாக, தனது வீட்டில் விஷ மாத்திரைகளை நீரில் கரைத்து குடித்துள்ளார். இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கணேசமூர்த்தி இருந்ததை அவரது நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தியைப் பார்க்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கணேசமூர்த்திக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறி, நல்ல பதவி பெற்றுத் தர திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொடா சிறைவாசம்: ஈரோடு மாவட்டம் சென்னிமலை குமாரவலசுவைப் பூர்வீகமாகக் கொண்ட கணேசமூர்த்தி, 1978-ம் ஆண்டு திமுக மாணவரணி இணை அமைப்பாளர் பதவியில் தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1993-ல் மதிமுகவை வைகோ தொடங்கியபோது, அவருடன் சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியது தொடர்பான பொடா வழக்கில் வைகோவுடன் சேர்த்து கணேசமூர்த்தியும் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு முதல், மதிமுகவின் பொருளாளர் பதவி வகித்து வந்துள்ளார். மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ள கணேசமூர்த்தி, பழனி தொகுதியில் ஒருமுறையும், ஈரோடு தொகுதியில் இரு முறையும் எம்பியாக தேர்வு பெற்றவர்.
கடந்த 2019-ம் ஆண்டு திமுக கூட்டணியில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT