Last Updated : 28 Mar, 2024 04:04 AM

 

Published : 28 Mar 2024 04:04 AM
Last Updated : 28 Mar 2024 04:04 AM

தினகரன் வாகனம் தடுத்து நிறுத்தம், போலீஸார் - தொண்டர்கள் தள்ளுமுள்ளு: நடந்தது என்ன?

தேனியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த டிடிவி தினகரன் வேனில் அதிக ஆட்களுன் வந்ததால் இரும்புக்கேட்டை பூட்டி அனுமதிக்க மறுத்த போலீஸார். படம்:நா.தங்கரத்தினம்.

தேனி: அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்ய அதிக ஆட்களுடன் வந்ததால் அவரது வேன் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. தடுப்பை மீறி கட்சியினர் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன் நேற்று பிற்பகல் 2.15-க்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். இதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பிரச்சார வாகனத்தில் செல்ல முயன்றார். அந்த வாகனத்தில் பலர் உள்ளே அமர்ந்திருந்தனர். மேலும் வாகனத்தின் பக்க பக்கவாட்டிலும் ஏராளமானோர் தொற்றியபடி நின்றிருந்தனர். இதற்கு போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிகமான ஆட்களை அனுமதிக்க முடியாது என்று வேனை மறித்தனர்.

அங்கிருந்த இரும்புக் கேட்டைப் பூட்டினர். இதற்கு கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு வேன் இரும்புக் கேட்டில் மோதுவது போலச் சென்றது. அப்போது ஒரு போலீஸாரின் காலில் டயர் லேசாக ஏறியது. இந்த பரபரப்பில் கட்சியினர் பலரும் கேட்டில் இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி உள்ளுக்குள் ஓடினர். அவர்களைப் பிடித்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

அதிகப்படியான ஆட்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கண்டிப்புடன் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சர்ச்சையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நேரமாகிக் கொண்டே இருந்ததால் குறிப்பிட்ட சிலர் மட்டும் வேனில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். பின்பு ஆட்சியர் அலுவலகத்துக்குள் வேன் சென்றது. தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்பு அவர் அதே வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x