Published : 27 Mar 2024 05:51 PM
Last Updated : 27 Mar 2024 05:51 PM
விருதுநகர்: தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகரில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, தொழிலதிபர்கள் ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அதையடுத்து, விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை ராம்கோ குடியிருப்பு வளாகத்திற்குள் நடை பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கிய நபர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
அப்போது, தொழில் நிலவரம், அரசு திட்டங்களை செயல்படுத்தும் விதம், நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் உள்ளதா என்றும், தேர்தல் நிலவரம் குறித்தும் முதல்வர் விசாரித்தார். அப்போது, இண்டியா கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் 12 பேர் பங்கேற்று அரசின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னிந்திய உலோக கொள்கலன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம், பருப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி விவேகானந்தம், விருதுநகர் வர்த்தக சபை நிர்வாகி பவளம் சத்தியமூர்த்தி, மிளகாய் வர்த்தக சபை நிர்வாகி ஆனந்த் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மேலும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வணிக சங்க சங்க நிர்வாகி வைகுண்டராஜா, செங்குந்த முதிலியார் சங்க நிர்வாகி சங்கரசுப்பிரமணியனம், ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், யாதவர் சங்கத் தலைவர் குருசாமியின் மனைவி வேலம்மாள், புளியங்குடி பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் மௌலூல்கவுமி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தொகுதி வேட்பாளர் ராணி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT