Published : 27 Mar 2024 06:00 PM
Last Updated : 27 Mar 2024 06:00 PM
மதுரை: “நான் பேசும்போது இடையில் எழுந்து சென்றால் ரத்தம் கக்கி சாவீங்க” என்று மதுரை அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு ‘கிண்டலாக’ பேசியது, தொண்டர்கள் மத்தியில் அடங்காத சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் வேட்பாளர் மருத்துவர் சரவணனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சரும் மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “குடுகுடுப்பக்காரனைபற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது நகர்ந்தால் ரத்தம் கக்கி சாவார்கள் என்று சொல்வார். நான் சிறு வயதில் சிம்மக்கல் பள்ளியில் படித்துள்ளேன். அப்போது பள்ளிக்கு செல்லும் வழியில் இதுபோல் மாட்டிக் கொண்டு குடுகுடுப்பக்காரன் சொல்லி நானே நகர முடியாமல் அழுது இருக்கிறேன்.
அதுபோல், இந்த கூட்டத்துக்கு வருவதற்கு முன், மந்திரம் சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறேன். நான் பேசிக்கொண்டு இருக்கும் யாராவது கிளம்பிச் சென்றால், அவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள். அதனால், கூட்டம் முடியும் வரை அமைதியாக நகராமல் இருங்கள்.
அதிமுக வேட்பாளர் சரவணன் ஊரறிந்த வேட்பாளர். நாம் இப்போது தேர்தல் போருக்கு தயாராகுகிறோம். எப்படி எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்த வேண்டும் என்ற களப்பணியை சொல்லி தருவதற்கே இந்த கூட்டம்.
அதனாலே, பொறுப்பாக தொண்டர்கள் கூட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கிண்டலாக ரத்தம் கக்கி சாவார்கள் என்று விளையாட்டாக சொன்னேன். மன்னர் பரபம்பரை ஒழிக்கப்பட்ட தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சியை ஒழிக்க முடியவில்லை” என்றார்.
வேட்பாளர் சரவணன் பேசுகையில், “பொதுவாக மருத்துவமனையில் நோயாளியின் பல்ஸ் பார்த்துவிட்டு அவரை வீட்டிற்கு அனுப்புவதா? படுக்கையில் அட்மிட் செய்து குளுக்கோஸ் ஏற்றுவதா? என ஒரு மருத்துவராக நான் முடிவெடுப்பேன். ஆனால், தற்பாது தமிழகத்தின் ‘பல்ஸ்’ பார்த்தபோது, இதயம் அதிமுக, அதிமுக, என்று சொல்கிறது. அதனால், வெற்றி நமக்குதான்” என்றார். தொடர்ந்து செல்லூரில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதிலும் அவர் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக, கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியர் வாடகை வீட்டில் குடியிருந்தால் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம். மக்களவை உறுப்பினரிடம் அனைத்து பணத்தையும் கட்சி வாங்கிக் கொள்ளும். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 5 ஆண்டு எம்எல்ஏவாக இருந்தபோது எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தனர். கட்சியில் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறக்கூடிய சு.வெங்கடேசனுக்கு எப்படி 10 சதவீதம் சொத்து கூடுதலாக வந்தது.
தற்போது இதுதான் மிகப்பெரிய கேள்வி. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய சு.வெங்கடேசன், தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். தேர்தலுக்கு ஆறு மாதம் முன் வந்துள்ளார். மக்களுக்காக பணியாற்றவில்லை. தனக்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காகவும் பணியாற்றியுள்ளார். அவரை ஒட்டுமொத்த மக்களும் அவரை புறக்கணிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT