Last Updated : 27 Mar, 2024 04:54 PM

2  

Published : 27 Mar 2024 04:54 PM
Last Updated : 27 Mar 2024 04:54 PM

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” - சி.வி.சண்முகம் பேச்சு

படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?” என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ் வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பொறுப்பாளர் சிவி. சண்முகம் எம்.பி, வேட்பாளர் தமிழ்வேந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “புதுச்சேரி அரசியல் வித்தியாசமானது. தமிழகம் முழுவதும் அரசியல் செய்தாலும் புதுச்சேரியில் எங்களால் அரசியல் செய்ய முடியாது. ஆரம்பத்தில் இருந்தே புதுச்சேரி மீது தலைமை கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டது. ஜெயலலிதா வந்த பிறகு புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தினார்.

அதனால்தான் தொடர்ந்து 6 பேர் வரை எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதனை இன்னும் தீவிரப்படுத்தியிருந்தால் இன்று நாம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கலாம். 2016-ல் கூட்டணி ஆட்சி வரவேண்டியது. ஆனால் இன்றுள்ள முதல்வரால் அப்போது அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம்.

எங்கெல்லாம் ஆட்சியில் இல்லையோ, பிரதான கட்சியாக இல்லையோ, அங்கெல்லாம் ஆளும் அரசுடன் நட்பு, கூட்டணி வைத்துக் கொள்வது, பிறகு அதனை பிளவுபடுத்தி, அழிக்கும் வேலைகள்தான் இன்று இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுதான் புதுச்சேரியிலும் நடந்துள்ளது.

பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்த கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்களா?

வருகின்ற காலங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்திருக்கிறது. புதுச்சேரி முழுமையான அதிகாரம் இல்லாத யூனியன் பிரதேசம். அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிந்துள்ளது. ஒரு கிளர்க்கை மாற்ற வேண்டும் என்றாலும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

முதல்வரின் பிரத்யேக அதிகாரமே யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். இல்லாவிட்டால் நீக்கலாம். அதைக் கூட இங்கு செயல்படுத்த முடியாத நிலை முதல்வருக்கு இருக்கிறது. ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு அதற்கான கோப்பை அனுப்புகிறார். அது 2 மாத காலமாக உள்துறை அமைச்சகத்தில் தேங்கியிருக்கிறது. அதை வைத்து ஒரு அரசியல் செய்ய பார்த்தனர் பாஜக. ஆனால் அது நடக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று சொல்கிறோம். ஆனால் அந்த அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. நம்முடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் இங்கு ஆட்சி செய்கின்றனர்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயருக்குத்தான் உள்ளனர். அதிகாரிகள் மனது வைக்கவில்லை என்றால் ஒரு பணியும் நடக்காது. இவை எல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று சுதந்திர காலத்தில் இருந்தே இங்கு கோரிக்கை இருக்கிறது.

மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் தவிர்த்து இங்கு யார் ஆட்சி செய்தனர். காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ், இப்போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி. ஆனால் இதுவரைக்கும் இந்த சட்டத்தில் ஒரு சிறு அதிகாரத்தையாவது இவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

இரட்டை எஞ்சின் ஆட்சி, அதாவது மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்தால் மாநிலம் வளர்ச்சியடையும், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும். விரைந்து செயல்படும், வளர்ச்சியடையும் என்றனர். இப்போது இங்கே 3 ஆண்டு காலம் யார் ஆட்சி நடக்கிறது?

மத்தியிலும் பாஜக ஆட்சி, மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு பாஜகதான் முதல்வர். ரங்கசாமி டம்மி முதல்வராக உள்ளார். ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதும் அவரை செயல்படவிடாமல் தான் வைத்திருந்தனர்.

தானாக ஒரு கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று முதல்வராக வந்தால் அங்கு பாஜக வந்து அமர்ந்துவிட்டது. அதனால் முதல்வர் பதவியை அவரால் முறையாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த 43 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் வளச்சியடையவில்லை.

ஓட்டல்கள் தோறும் மதுபானக் கடைகள். குடும்பத்துடன் ஓட்டலுக்கு செல்ல முடியவில்லை. எல்லா ஓட்டல்களிலும் மதுபானம் விற்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா? இதற்குத்தான் புதுச்சேரி மக்கள் ஓட்டு போட்டனரா? இதேபோன்று கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. தமிழகத்தில் என்ன நடக்கிறதோ, அதேதான் புதுச்சேரியிலும் நடக்கிறது.

அதனால் பள்ளிச் சிறுமி படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தான் அதிகரித்துள்ளன. ஆகவே, மக்கள் ஆளும் அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பது அவசியம். திமுக, மதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் வாரிசுகளை நம்பியுள்ளன. ஆனால் அதிமுக மட்டுமே சாமானியத் தொண்டரால் தலைமை வகித்து வழிநடத்தும் கட்சியாக உள்ளது.

மக்களவைத் தேர்தலில் எதிர்பாராத அதிசயம் நடக்கலாம். இந்திராகாந்தி, காமராஜர், அண்ணா மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் கூட தேர்தலில் தோற்றுள்ளனர். அவர்களை எதிர்த்த சாமானியர்கள் வென்றுள்ளனர். ஆகவே, அதிமுகவினர் நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x