Published : 27 Mar 2024 05:39 PM
Last Updated : 27 Mar 2024 05:39 PM
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியில் தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் முதலில் அறிவிக்கப்பட்டனர். திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளரும், வேட்பு மனு தாக்கலின் இரண்டாவது நாளில் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுதா பின்னணி என்ன? - திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில், கடலூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இறுதிகட்டத்தில் அவர் மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை தொகுதி ரேஸில் இருந்தவர்கள் யார்? - மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி, மணி ஷங்கர் ஐயர், செல்லக்குமார், எம்.பி திருநாவுக்கரசர், சுதா ஆகியோரது பெயர் பரிசீலனையில் இருந்தது.
களம் சுதாவுக்கு மாறியது எப்படி? - ஏற்கெனவே பிரவீன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் எனப் பலர் தொகுதியைக் கைப்பற்ற முட்டி மோதினர். இதனால், அறிவிப்பு வெளியிட முடியாமல் திணறியது காங்கிரஸ். இந்த நிலையில்தான் சிக்கலைத் தவிர்க்கவும்,ஒருவருக்கு தொகுதி ஒதுக்கினால் மற்ற தலைவர்களுக்கு அதிருப்தி நிலவும் என்பதால் மாற்று வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டது காங்கிரஸ் தலைமை.
அப்போதுதான், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக சுதாவை அறிவிக்க ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
குறிப்பாக, காங்கிரஸின் எந்த அணிகளில் இருந்தும் பெரியதாக மக்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எனவே, மகிளா காங்கிரஸின் தமிழக மாநில தலைவரான சுதாவுக்கு மயிலாடுதுறை கொடுக்கலாம். இதனால் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்னும் ஆலோசனை முன்வைத்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அதிருப்தியைத் தவிர்க்கவும், பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கவும் கடலூரில் போட்டியிட விருப்ப மனு வழங்கியிருந்த சுதாவுக்கு, காங்கிரஸ் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT