Published : 27 Mar 2024 04:35 PM
Last Updated : 27 Mar 2024 04:35 PM
தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அக்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல் துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25-ம் தேதி, தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியினர், கூட்டணி கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டோருடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வேட்பாளர் வரும்போது 3 வாகனங்களில் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்துக்குள் வர வேண்டும் போலீஸார் வலியுறுத்திய நிலையில், 4 வாகனங்களில் வந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விருப்பாட்சி கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளி என்ற எல்லை வரை மட்டுமே கட்சியினர் கூட்டமாக வரலாம் என்ற விதி உள்ள நிலையில் 100 மீட்டர் எல்லைக்கோட்டை கடந்து கட்சியினர் திரண்டு வந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளனர் எனவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றொரு புகாரையும் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் அளித்தார். அதன்பேரில் பாமக-வைச் சேர்ந்த 20 பேர் எனக் குறிப்பிட்டு மற்றொரு வழக்கையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
விதிகளை மீறி நுழைந்தது, அதிக கூட்டம் கூடியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் பாமக-வினர் மீது தருமபுரி போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT