Published : 27 Mar 2024 03:18 PM
Last Updated : 27 Mar 2024 03:18 PM
புதுச்சேரி: “மத்திய அரசில் யாரும் தரமாட்டார்கள் என்பது தெரிந்துதான் முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு நேரில் செல்லவில்லை. நிதி தராமல் தமிழகத்தைப் போல் புதுச்சேரிக்கும் மத்திய நிதியமைச்சர் கைவிரித்து விட்டார்” என்று புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இன்று காலை மணக்குள விநாயகர் கோயிலில் பூஜை செய்து விட்டு சாரத்திலிருந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் சலீம், சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் தேவ பொழிலன் உள்பட அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தனர்.
ஊர்வலத்தால் கடும் போக்கு வரத்து நெரிசல் புதுச்சேரியில் ஏற்பட்டது. புதுச்சேரியில் ஈசிஆர் தொடங்கி சென்னை புறவழிச் சாலை, காமராஜ் சாலையில் நெடுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100 மீட்டர் முன்பாக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வேட்பாளர், முக்கிய நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த வைத்திலிங்கம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றம் சென்றால் தயிர் சாதம்தான் சாப்பிடுவேன் என்று அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார். அவர் போல் வெளிநாடுகளுக்கு சுற்ற முடியாது. அவருக்கு எல்லா சாதமும் கிடைக்கும். எனக்கு தயிர் சாதம்தான் கிடைக்கும். தேர்வு ஆணையம் அமைப்பதாக சொல்லி விட்டு புதுச்சேரி அரசு ஒரு முன்வரைவுக் கூட டெல்லிக்கு அனுப்பவில்லை.
அதேபோல் கடல் அரிப்பு தடுக்க, சாலையை விரிவாக்க என எந்த முன்வரைவும் டெல்லிக்கு அனுப்பவில்லை. மாநில அரசு எதுவும் செய்யாததால் மத்திய அரசு எந்த நிதியையும் தருவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக ரங்கசாமி பாஜக கூட்டணியில் இருந்தும், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ரங்கசாமி சந்திக்கவில்லை. மத்திய அரசில் யாரும் தரமாட்டார்கள் என்பது முதல்வர் ரங்கசாமி தெரியும் என்பதால் நேரில் சென்று பார்க்கவில்லை. நாங்கள் ஆட்சியில் மத்திய அரசிடம் நிதி ஆதாரம் கேட்டோம்.
தற்போது பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி வந்த பிறகும் மத்திய அரசு நிதி தரவில்லை. தமிழகத்தை போல் புதுச்சேரிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்துவிட்டார். ரேஷனை திறக்க முடியவில்லை. அரிசி கூட போடவில்லை. மக்களுக்கு உண்மை தெரியும். பாஜக வென்றால் மத்திய அமைச்சர் தருவதாக முதல்வர் சொல்வதற்கான காரணம், அவர்களால் வெல்ல முடியாது என்பது ரங்கசாமிக்கு தெரியும்" என்று வைத்திலிங்கம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT